Published : 17 Oct 2020 11:54 AM
Last Updated : 17 Oct 2020 11:54 AM
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கிராமப் பகுதிகளுக்குச் சென்று, ஊரடங்கால் வீடுகளில் இருக்கும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் முதல் இணைய வழியில் பாடத்தை நடத்த உத்தரவிட்டது. இதை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதில் ஒன்று, சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 714 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் மணிவாசகம் தலைமையில் 24 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இணைய வழியில் பாடம் நடத்தி வரும் சூழலில், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வீட்டுக்குச் சென்று, தாங்கள் இணைய வழியில் அளித்த பாடங்களை முடித்துள்ளனரா என ஆய்வு செய்து, அதற்கு மதிப்பெண்களை அளித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், இப்பள்ளியைச் சுற்றியிருக்கும் சி. முட்லூர் மற்றும் மண்டபம், அம்புபூட்டியபாளையம், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, கீழமூங்கிலடி, கீழச்சாவடி, நவப்பேட்டை, மடுவங்கரை, தையாக்குப்பம் உட்பட 12 கிராமங்களில் நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகிறனர்.
ஊர் பொது இடங்களான கோயில் வளாகம், ஊராட்சி மன்ற கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பெரிய மரத்தடி பகுதி உள்ளிட்ட இடங்களில் இதற்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. பெற்றோர், ஆசிரியர்களை மகிழ்வுடன் வரவேற்று பாடம் நடத்தும் பொது இடத்தை சுத்தம் செய்து தருகின்றனர். மாணவர்களும் விரும்பி பாடம் கற்க வருகின்றனர். கடந்த இரண்டரை மாதமாக இது தொடர்ந்து நடந்து வருகிறது. சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
9,10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடைபெறுகின்றன. 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடக்கின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியரும் ஒவ்வொருநாள் ஒரு கிராமத்துக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
இது குறித்து தலைமையாசிரியர் மணிவாசகம் கூறுகையில், “ பெற்றோரின் விருப்பத்தின் பேரில், சமூக இடைவெளியோடு இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆசிரியர் பணியின் வெற்றி பெற்றோர் மற்றும் மாணவர்களைச் சார்ந்திருக்கிறது. மும்முனை ஒருங்கிணைப்பு இதில் அவசியம். இந்த அசாதாரண தருணத்தில் இக்கிராம பெற்றோர் கேட்டுக் கொண்டதால் இதை நடைமுறைப்படுத்த முடிகிறது. பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
இது குறித்து கீழ் அனுவம்பட்டு கிராம மாணவிகள் கூறுகையில், “எங்கள் ஊர் கோயில் மற்றும் பொது இடத்தில் கல்வி கற்கும் போது ஒரு இனிய அனுபவம் கிடைக்கிறது. நமக்காக ஆசிரியர்கள் நமது ஊருக்கு வந்து பாடம் நடத்துகிறார்கள். நாமும் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT