Published : 12 Oct 2020 07:12 PM
Last Updated : 12 Oct 2020 07:12 PM
ஒரே மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, 10 வயதான கேரளச் சிறுமி சான்வி சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இவர் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக உள்ளார். இவரின் மகளான 10 வயதுச் சிறுமி சான்வி பிரஜித். இவர் சிறு வயதில் இருந்தே சமையலில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
சான்வியின் தாய் மஞ்சிமா பிரஜித்துக்கு இயல்பாகவே சமையலில் ஆர்வம் உண்டு. ஸ்டார் சமையல் நிபுணரான அவர், சமையல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, கூடவே தனது மகளையும் அழைத்துச் செல்வார்.
இதுகுறித்து மஞ்சிமா கூறும்போது, ''அவளின் அப்பா விமானப் படையில் இருப்பதால் அடிக்கடி பார்ட்டிகள் நடக்கும். அங்கு விதவிதமான உணவுகள் பரிமாறப்படுவதை சான்வி ஆர்வத்துடன் கவனிப்பாள்.
அவள் குழந்தையாக இருக்கும்போதே ஒருமுறை சமையல் நிகழ்ச்சிக்காக அடை பாயாசம் செய்தாள். அத்தனை சுவையாக இருந்தது. அப்போது அடுப்பைப் பயன்படுத்த அவளால் முடியவில்லை என்பதால் அடுத்தகட்டப் போட்டிக்கு அவளால் செல்ல முடியவில்லை.
அவளின் ஆர்வத்தைக் கண்டு தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்துக் கொடுத்தோம். விதவிதமாகச் சமைக்கத் தொடங்கினாள். 6 மாதப் பொதுமுடக்கம் அவளின் சமையல் திறமையை இன்னும் உயர்த்தியது.
தற்போது இட்லி, ஊத்தப்பம், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், அப்பம், சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட 33 வகையான உணவுகளை ஒரே மணி நேரத்தில் சமைத்து, சான்வி சாதனை படைத்திருக்கிறாள். இந்தச் சாதனை ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது'' என்றார் தாய் மஞ்சிமா பிரஜித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT