Last Updated : 12 Oct, 2020 05:31 PM

 

Published : 12 Oct 2020 05:31 PM
Last Updated : 12 Oct 2020 05:31 PM

'எப்படியாவது படிக்க வேண்டும்'- புதுச்சேரி, காரைக்காலில் ஆர்வத்துடன் பள்ளி வரும்  9, 11-ம் வகுப்பு மாணவர்கள்

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் 9, 11-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்திருந்தனர். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் வருகை சதவீதம் அதிக அளவில் இருந்தது.

ஊரடங்கின் 5-ம் கட்டத் தளர்வில் பள்ளிகள், திரையரங்குகள் ஆகியவற்றை அக்டோபர் 15-ம் தேதி திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதுவை அரசு கடந்த 8-ம் தேதி பள்ளிகளைத் திறந்தது. அன்றைய தினம் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்க்கப் பள்ளிக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும், 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமையிலும் பள்ளிக்கு வரலாம் எனக் கல்வித்துறை அறிவித்தது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதம் பெற்றுவர அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளிகள் திறப்புக்கு எதிர்க்கட்சிகளான என்ஆர்.காங்கிரஸ், அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எதிர்ப்புகளையும் மீறி கடந்த 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா? என்ற கேள்வி இருந்தது.

ஆனால், நேர்மாறாக அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடந்தன. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.

இந்த நிலையில் இன்று 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டன். காலை 9 மணி முதலே மாணவர்கள் பள்ளிகளை நோக்கி வரத் தொடங்கினர். மாணவர்கள் பெற்றோர் கடிதத்துடன் முகக்கவசம் அணிந்து வந்தனர். அனைத்துப் பள்ளிகளிலும் ஏராளமானோர் வந்தனர்.

பள்ளி நுழைவுவாயிலில் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கேட்டதற்கு, "தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் உண்டு. எங்களில் பலரிடம் செல்போனே இல்லை. படிக்க வேண்டும். முக்கிய வகுப்புகள் என்பதால் எப்படியாவது பள்ளிக்கு வந்து விடுகிறோம்." என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x