Last Updated : 12 Oct, 2020 01:42 PM

 

Published : 12 Oct 2020 01:42 PM
Last Updated : 12 Oct 2020 01:42 PM

அக்.16-ல் நீட் தேர்வு முடிவுகள்; தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14-ல் மீண்டும் தேர்வு நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் அக்.16-ம் தேதியன்று வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

எனினும் கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாதவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில், தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு அக்.14-ம் தேதி மீண்டும் நீட் தேர்வை நடத்த, தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்.16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 80,005 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்காக 52,720 இடங்கள், 525 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இடங்கள் உள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x