Published : 12 Oct 2020 07:01 AM
Last Updated : 12 Oct 2020 07:01 AM

‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் நிகழ்ச்சி; மருத்துவம், பொறியியல் துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கு வாய்ப்புகள்: பாதுகாப்புத் துறை விஞ்ஞானி வி.டில்லிபாபு தகவல்

சென்னை

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடி வமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியின் 3-ம் அமர்வு கடந்த வெள்ளியன்று தொடங்கியது.

இதில் 2-ம் நாள் (சனிக்கிழமை) நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானியும், என்டிஆர்எஃப் இயக்குநருமான டாக்டர் வி.டில்லிபாபு, ‘மருத்துவம், பொறியியல் துறையில் தற்போதைய கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

மருத்துவமும் பொறியியலும் பல புள்ளிகளில் ஒன்றிணைகின்றன. குறைபிரசவ குழந்தைகளைப் பாதுகாக்கும் இன்குபேட்டர், மலைப்பகுதிகளில் பெரிதும் பயன்படக்கூடிய பயோ-டாய்லெட், உயிர்காக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்... என மருத்துவர்கள்,இன்ஜினீயர்கள், அறிவியல் நிபுணர்கள் இணைந்து பணியாற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அணுசக்தி துறை, இஸ்ரோ, டிஆர்டிஓ போன்ற உயர் ஆய்வு நிறுவனங்களில் இன்ஜினீயர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று பொதுவாக எண்ணத் தோன்றும். ஆனால், அங்கு இன்ஜினீயர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், அறிவியல் படித்தவர்கள், பயோடெக்னாலஜி படித்தவர்கள் என பலர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

மாணவர்கள் முதலில் எந்த துறையில் பயணம் செய்வது என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதற்கு உதவ பல்வேறு படிப்புகள் உள்ளன.ஒரு படிப்பில் சேர இடம் கிடைக்காவிட்டால் இன்னொன்று என நிறையவாய்ப்புகள் உள்ளன.

படிப்பு என்பது வெறும் வேலைவாய்ப்புக்காக என்று எண்ணக் கூடாது. சமுதாய மேம்பாட்டுக்கு, நாட்டின் முன்னேற்றத்துக்கு நாம்கற்கும் கல்வி பயன்பட வேண்டும் என்பது நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். எங்கு படிக்கிறோம் என்பதை விடவும் எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியம். கல்வி, திறமை இவற்றோடு அறநெறி சார்ந்த விழுமியங்கள் மிக மிகமுக்கியமானவை. எவ்வளவுதான் திறமை மிக்கவர்களாக இருந்தாலும் அறநெறி இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகி விடும்.

இவ்வாறு டில்லிபாபு கூறினார்.

நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். கடந்த 2 நிகழ்வுகளையும் தவறவிட்டவர்கள் https://bit.ly/3jKNAto, https://bit.ly/36RxOtq என்ற யுடியூப் லிங்க் கில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x