Published : 10 Oct 2020 01:39 PM
Last Updated : 10 Oct 2020 01:39 PM
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். கற்றுக்கொடுக்கும் ஆசான்களுக்கும் அப்படித்தானே!
அட்டப்பாடியில் ஓலைக் குடிசையில் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் பழங்குடி மாணவி அனாமிகாவும் அவரது மாணவர்களும் அப்படி ஒரு சிறப்பை அடைந்திருக்கிறார்கள். கேரள வனத் துறையின் ‘வனாயனம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் சைலன்ட் வேலி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனைகட்டி அட்டப்பாடியைச் சேர்ந்த, 8-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி அனாமிகா சக மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது பற்றி ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம். அனாமிகாவுக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துகளும் உதவிகளும் குவிந்துவரும் நிலையில், யூத் ஐகான் விருதுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டு வன விலங்குகள் வார விழாவை ஒட்டி கேரள வனத்துறை நடத்திய ‘வனாயனம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக அனாமிகாவும் அவரது மாணவர்களும் சைலன்ட் வேலி பள்ளத்தாக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அனாமிகாவின் தந்தை சுதிரிடம் பேசினோம்.
''அனாமிகா தொடர்பான செய்திகளைப் பார்த்துவிட்டு, சைலன்ட் வேலி வனத் துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வனத்தைப் பற்றியும், வனவிலங்குகளைப் பற்றியும் பல்வேறு விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அனாமிகாவும் மற்ற குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டனர். இன்று காலை 7.30 மணிக்கு வனத் துறை சுற்றுலா வேன் இங்கு வந்தது. சிறு குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு சற்றே வளர்ந்த10 குழந்தைகளை மட்டும் அழைத்துச் சென்றார்கள். குழந்தைகளுடன் நானும், என் மனைவியும் அந்தப் பயணத்தில் பங்கேற்றோம்.
சைலன்ட் வேலி வனத்துறை அலுவலகத்தில் வனத்தைப் பற்றியும், வனவிலங்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு அதிகாரிகள் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தனர். வனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. அதில் அனாமிகா உள்ளிட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சைலன்ட் வேலி டவர் காட்சி, கண்காட்சி வளாகம் என எல்லாவற்றையும் குழந்தைகள் கண்டுகளித்தனர். குழந்தைகள் மட்டுமல்ல, நாங்களும் இதற்கு முன்னர் சைலன்ட் வேலிக்குப் போனதில்லை. இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது'' என்றார்.
இந்தப் பயணம் குறித்து அனாமிகா கூறும்போது, ''நாங்க காட்டுலதான் இருக்கிறோம்னாலும், காடுகளுக்குள்ளே போனதே கிடையாது. அதைப் பத்தித் தெரிஞ்சுக்க எங்களை மாதிரிக் குழந்தைகளுக்கு இதுவரைக்கும் வாய்ப்பும் கிடைக்கலை. ஓலைக் குடிசைல நான் நடத்தும் ஸ்மார்ட் கிளாஸ் மூலமா இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்று தெரிவித்தார்.
தற்போது கற்றல் முறையைக் குழந்தைகளுக்குத் தந்துவரும் அனாமிகாவை ‘குட்டி டீச்சர்’ என்றே அட்டப்பாடி மக்கள் அழைக்கிறார்கள். இங்கு படிக்கும் குழந்தைகளை ‘குட்டிக் கூட்டம் ஸ்டூடண்ட்ஸ்’ என்றும் அழைத்து மகிழ்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT