Published : 08 Oct 2020 02:55 PM
Last Updated : 08 Oct 2020 02:55 PM
அசாமில் நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல ஹரியாணாவில், சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் அக்.15-ல் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்.15-ம் தேதி முதல், பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே அசாம் மாநிலத்தில் நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சார்மா, ''கரோனா பரவலைத் தடுக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் வெளியிடப்படும். எனினும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதிகள் திறக்கப்பட வாய்ப்புகள் குறைவே'' என்று அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுக்குள் வந்து, சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் அக்.15-ல் இருந்து பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் கூறும்போது, ''6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மீண்டும் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் அக்.15 முதல் பள்ளிகள் திறக்கப்படும். வருங்காலத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT