Published : 08 Oct 2020 11:56 AM
Last Updated : 08 Oct 2020 11:56 AM
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையத்தில் இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் அக்.1-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 7,435 இடங்களுக்கு 1400 மாணவர்கள் மட்டுமே முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்தினர். இதனால் சுமார் 1000 காலியிடங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (அக்.8) தொடங்கியுள்ளது. பொதுப் பிரிவுக் கலந்தாய்வில் மாணவர்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் காணொலி வடிவில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விளக்கங்களைப் பார்த்துக் கலந்தாய்வில் பங்கேற்பது மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT