Published : 07 Oct 2020 12:50 PM
Last Updated : 07 Oct 2020 12:50 PM
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12-ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் இலவசமாகச் சேர்க்கப்படுவர். முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான, ஆதரவற்றவர்கள் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.
அதன் பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும்.
இதற்கிடையே முதல்கட்டமாக விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள இடங்களுக்கு, மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
''தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது எஞ்சியுள்ள இடங்கள் குறித்த பட்டியலை, தங்களின் தகவல் பலகையில் அக்.10-ம் தேதி ஒட்ட வேண்டும்.
இதையடுத்துக் குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் வழியாக அக்.12-ம் தேதி முதல் நவ.7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை, அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் நவ.11-ம் தேதி வெளியிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
எஞ்சியுள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் நவ.12-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களின் பட்டியலை பள்ளித் தகவல் பலகையில் வெளியிடுவதோடு, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT