Published : 06 Oct 2020 06:31 PM
Last Updated : 06 Oct 2020 06:31 PM
மதுரை அருகே உள்ளது கொண்டபெத்தான் கிராமம். நான்கைந்து தெருக்களே உள்ள மிகச்சிறிய கிராமமான இவ்வூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில், மாணவ, மாணவிகள் தங்களது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கும் வகையில், பள்ளி சார்பில் வீதிதோறும் நூலகம் தொடங்கத் திட்டமிடப்பட்டது.
இதன் தொடக்க விழா, தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் இன்று நடைபெற்றது. பேராசிரியை அர்ச்சனா தெய்வா முன்னிலை வகித்தார். முன்னதாக சந்திரலேகா நகர் வீதியிலுள்ள குழந்தைகளைக் கலை அரங்கத்திற்கு வரவழைத்துக் கதைகள் சொல்லப்பட்டன. சிறிய கலந்துரையாடலுக்குப் பிறகு, காகிதத்தின் மூலம் பலவகையான தொப்பிகள் செய்யும் முறை கற்றுத் தரப்பட்டது.
அதன் பின்னர் கதை வளர்த்தல் திறன் பயிற்சிக்காகக் கற்பனையாக ஒரு கதையின் முதல் வரி சொல்லப்பட்டு அடுத்தடுத்து மாணவ மாணவிகள் அந்தக் கதையை வளர்த்தனர். பின்பு மாணவரிடம் கதைகள் கேட்கப்பட்டன. ஹரி கிருஷ்ணன், சந்தோஷ், வெற்றி, லோகேஸ்வரி, சஞ்சய் ராமசாமி, சூர்யா, அப்சனா, ஆதிலட்சுமி ஆகிய குழந்தைகள் கதைகள் கூறினார். அதிகக் கதைகள் கூறிய ஹரி கிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாணவர்களுக்கும் படக் கதைகள் நிரம்பிய ஒவ்வொரு புத்தகம் வழங்கப்பட்டு அவர்கள் சுயமாகவும் கதைகளை வாசித்தார்கள். வாசிப்பின் முடிவில் அந்தத் தெருவைச் சேர்ந்த மாணவி கௌசல்யாவின் தாயார் ராஜேஸ்வரியிடம் நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை பேராசிரியை அர்ச்சனா நூல் கொடையின் சார்பாக ஒப்படைத்தார்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது என்றும், அடுத்த வாரம் அவற்றைப் பெற்று, சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாணவர்களுக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல ஊரில் உள்ள மேலும் மூன்று வீதிகளிலும் நூலகம் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் மாணவி காதர் நிஷா நன்றி கூறினார்.
"இதுபோன்ற புதிய முயற்சிகளுக்குக் கிராம மக்கள் முழு ஒத்துழைப்புத் தருகிறார்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரித்திருக்கிறது" என்று தலைமை ஆசிரியர் தென்னவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT