Published : 05 Oct 2020 02:35 PM
Last Updated : 05 Oct 2020 02:35 PM
கரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு புதுச்சேரி, காரைக்காலில் தூய்மை செய்யும் பணிகள் தொடங்கின. இப்பணிகள் நிறைவடைந்து வரும் 8-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அதேநேரத்தில் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது மீண்டும் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளப் பள்ளிக்கு வரலாம் என்று கல்வித்துறை அண்மையில் அறிவித்தது.
பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்ததால், தூய்மைப் பணிக்காக இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இப்பணிகள் வரும் 7-ம் தேதி வரை நடக்கின்றன.
இதுகுறித்துக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கூறுகையில், "பள்ளி, வகுப்பறைகள் மாணவ, மாணவிகளின் வருகைக்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படும். தனிமனித இடைவெளியுடன் இருக்கை அமைத்தல், கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்குக் கிருமிநாசினி வழங்கல் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதையடுத்து 8-ம் தேதி பள்ளிகள் தொடங்குகின்றன.
வாரத்துக்கு 6 நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை அரை நாள் வகுப்புகள் இருக்கும். மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம். இதற்காகத் தனியாக விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது" என்று குறிப்பிட்டார்.
இச்சூழலில் பள்ளிகள் திறப்புக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறப்பு முடிவைக் கைவிடக் கோரி, கல்வித்துறை முன்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் மாணவர் நலன் கருதி திறப்பைத் தள்ளிவைக்கக் கோரினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT