Published : 05 Oct 2020 10:33 AM
Last Updated : 05 Oct 2020 10:33 AM
இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வை நேற்று இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளையோர் எழுதி இருக்கிறார்கள். தேர்வு எழுதி முடித்த கையோடு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வுக்குத் தயாராக மும்முரமாகத் தொடங்கி இருப்பார்கள்.
இந்நிலையில் யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இணையம் வழி இலவசப் பயிலரங்கம் நடத்த சென்னை கிரீன்வேஸ் சாலை ( பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28) மாநில அரசு நிறுவனமான அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் முடிவெடுத்துள்ளது.
இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் குறித்து இந்நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ராமன் கூறியதாவது:
“அகில இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், 05.10.2020 முதல் 12.10.2020 வரை (சனி, ஞாயிறு நாட்களைத் தவிர) ஆறுநாள் இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் நடத்த இருக்கிறோம். இதில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வித் துறையினருக்கும் பயன்படும் வகையில் தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு, தொடக்கக்காலத் தமிழக வரலாறு, உலகப் பொருளாதாரச் சூழல், இந்தியப் பொருளாதாரச் சூழல், இந்திய அரசியலமைப்பு, கோயில்களும் கட்டிடக் கலையும், மன அழுத்த மேலாண்மை, சூழலியல் உள்ளிட்ட பல்வேறு பாடத் தலைப்புகளில் துறைசார் வல்லுநர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
காலை 11 - 12.30 மற்றும் பிற்பகல் 2 - 3.30 ஆகிய இரு வேளைகளில் இக்கருத்துரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யத் தேவையில்லை. நாட்டின் நிர்வாகப் பணியை மேலெடுக்கவும் மிக உயரிய பொறுப்பை வகிக்கவும் மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.
இளையோருக்கு சீரிய வழிகாட்டுதல், துறைசார் வல்லுநர்களுடன் உரையாட வாய்ப்பு, கலந்துரையாடலுக்கான களம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இன்று நடைபெறவிருக்கும் முதல் அமர்வில் ’கவனத்துடனும் செயலூக்கத்துடனும் திகழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் இந்நிறுவனத்தின் இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உரை நிகழ்த்துவார்.”
இவ்வாறு ராமன் தெரிவித்தார்.
அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் நடத்தும் இலவச இணையவழிப் பயிற்சி வகுப்பைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT