Last Updated : 30 Sep, 2020 02:03 PM

 

Published : 30 Sep 2020 02:03 PM
Last Updated : 30 Sep 2020 02:03 PM

ஜிப்மர் நிறுவன சட்டதிட்டப்படி புதுச்சேரிக்கு இடங்கள் ஒதுக்கீடு: இயக்குநர் உறுதி 

ராகேஷ் அகர்வால்.

புதுச்சேரி

ஜிப்மர் நிறுவன சட்டதிட்டப்படி அனைத்து இட ஒதுக்கீடு, புதுச்சேரி இருப்பிடத் தகுதிக்கான வாய்ப்புகள் தரப்படும் என்று இயக்குநர் ராகேஷ் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்பில் புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. முன்பு ஜிப்மர் கல்லூரியால் தனி நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடந்து வந்தது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மத்திய மருத்துவக் கலந்தாலோசனைக் குழு சேர்க்கையை நடத்த உள்ளது. இதனால் புதுச்சேரிக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள் 54-ம் மாணவர்களுக்குக் கிடைக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இணையத்தில் பலரும் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "கடந்த காலங்களில் இருந்துபோலவே 54 இடங்கள் புதுச்சேரிக்கு கிடைக்கும். இதுபற்றித் தவறான பிரச்சாரம் நடக்கிறது. ஜிப்மர் மாணவர் சேர்க்கை தொடர்பாகத் தவறான தகவல் பரப்புவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று உறுதி செய்திருந்தார்.

எனினும் ஜிப்மர் தரப்பில் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் விரும்பினர். இதைத் தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் இதை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜிப்மரில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கை தொடர்பாக நிர்வாகம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. ஜிப்மர் எம்பிபிஎஸ் அனுமதியானது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும். அதே நேரத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஜிப்மர் நிறுவன சட்டதிட்டப்படி அனைத்து இட ஒதுக்கீடு, இருப்பிடத் தகுதிக்கான வாய்ப்புகளும் தரப்படும்.

இது புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு மையங்களுக்கும் பொருந்தும். இது தொடர்பான அனைத்து அதிகாரபூர்வத் தகவல்களும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான பக்கத்தில் ஜிப்மர் இணையதளப் பக்கத்தில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x