Published : 30 Sep 2020 12:32 PM
Last Updated : 30 Sep 2020 12:32 PM
மேகம் தவழும் வானத்துக்குக் கீழே அடுக்கடுக்கான அட்டப்பாடி மலைகள். ஆனைகட்டியில் கேரள எல்லைச் சாவடி கடந்ததும் ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது மந்தியம்மன் கோயில். அங்கிருந்து தெற்கில் பிரியும் கரடுமுரடான பாதை. 20 அடி கடந்தால் இடது பக்கம் ஒரு மூங்கில் படல். அப்படலைத் திறந்தபடி நண்டும் சிண்டுமாகச் சிறுவர் சிறுமிகள் செல்கிறார்கள். தோளில் புத்தகப்பை. “எல்லாரும் எங்க போறீங்க?” என்று ஒரு சிறுவனிடம் கேட்கிறேன். “என்ட நாட்டுல ஒரு ஸ்மார்ட் கிளாஸ் உண்டல்லோ, அவிட” என்கிறான் அச்சிறுவன்.
மலைக்காட்டில் ஸ்மார்ட் கிளாஸா?’ எனப் புருவம் உயர்த்திப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு குடிசை தெரிகிறது. அதை ஒட்டி ஒற்றை வீடும், பூத்துக்குலுங்கும் பூச்செடிகளுமாய் அந்த இடமே ரம்மியமாக இருக்கிறது.
அது வெட்டவெளி ஓலைக் கூரை. அதைத் தாங்கி நிற்கும் பந்தல் கால்களில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்ட மரப்பலகைகள் தொங்குகின்றன. சாணம் மெழுகப்பட்ட தரை. அதில் விரிக்கப்பட்டிருந்த பாய்கள். அதில் தனிமனித இடைவெளி விட்டு அமர்கிறார்கள் குழந்தைகள்.
கடைசியாக இன்னொரு சிறுமியும் வருகிறாள். ஆனால், ஆசிரியர் எங்கே? சுற்றுமுற்றும் தேடியதைக் கவனித்த குழந்தைகள் அவள்தான் ஆசிரியை என்கிறார்கள். ஆம், தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் அனாமிகாதான், ஏழாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதனால்தான் கேரளம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறார் அனாமிகா. மலையாளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமல்ல ஜெர்மனும் சொல்லிக் கொடுக்கிறார்.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? அனாமிகாவே விளக்குகிறார்:
“திருவனந்தபுரம் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-வது பாஸ் செஞ்சேன். கரோனா வந்த பிறகு பள்ளிக்கூடத்தைத் திறக்க முடியாத சூழல். நானும், 5-ம் வகுப்புப் படிக்கும் என் தங்கச்சியும் பாடம் படிக்க முடியலை. அப்படியே படிச்சாலும் பள்ளிக்கூட சூழல் கிடைக்கலை. டிவியில பாடம் வரலை. பாடம் வந்தா கரண்ட் இருக்காது. ஸ்மார்ட்போன் இருக்கு… ஆனா, டவர் கிடைக்காது. எப்படித்தான் படிக்கிறது?
எங்களைப் போலவே எங்க ஊரு பிள்ளைகளும் கஷ்டப்பட்டாங்க. பள்ளிக்கூடம் மாதிரியே எல்லோரும் ஒரே இடத்துல உட்கார்ந்து படிச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். ஆனா, பாடம் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க? நான் எட்டாம் கிளாஸ். ஏழாம் வகுப்பு வரைக்கும் நானே சொல்லிக் கொடுப்பேனே! உட்கார்ந்து படிக்க இடம் இருந்தா போதும்னு அப்பாகிட்ட சொன்னேன். உடனே இந்தக் குடிசையை வகுப்பறையாக ஆக்கிடலாம்னாரு. அம்மா சுத்தம் செஞ்சு, சாணம் எல்லாம் மெழுகிக் கொடுத்தாங்க.
ரெண்டு மாசம் முன்னால, ஊருக்குள்ளே தெரிஞ்சவங்க வீட்ல எல்லாம் பேசினோம். பசங்க வந்தாங்க. காலையில 9.30-யிலிருந்து 1.30 வரைக்கும் கிளாஸ். அப்புறம் சாப்பாடு. 2.30 மணிக்கு மேல ஆன்லைன் கிளாஸ். அது இல்லைன்னா திரும்பவும் படிப்பு. இங்கே கிளாஸிற்கு வர்றவங்க எல்லாமே 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரைதான். இதுல தமிழ், மலையாளம் படிக்கிறவங்க இருக்காங்க. எனக்குத் தமிழ் தெரியாது. சிலருக்கு மலையாளம் தெரியாது. ஆனா, மலையாளம் தெரியாம பிளஸ் 2, டிகிரி போக முடியாது. அதனால அவங்களுக்கு நானே மலையாளம் கத்துக் கொடுக்கிறேன். எனக்கு ஸ்பெஷல் லாங்குவேஜ் ஜெர்மன்ங்கிறதுனால அதையும் சொல்லித் தர்றேன்.”
உற்சாகமாகப் பேசியவரிடம், “நீங்களும் இவங்களை மாதிரி ஒரு மாணவிதானே, இந்தக் குழந்தைகள் உங்க பேச்சுக்குக் கட்டுப்பட்டாங்களா?” எனக் கேட்டால், “அதெப்படி கேட்பாங்க. முதல்ல அவங்க கூடவே விளையாடினேன். கதை சொன்னேன். பாட்டுப் பாடி, அவங்களையும் பாட வச்சேன். அதுக்கப்புறமாத்தான் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்பவும் நாங்க எல்லாம் விளையாடிட்டு, பாடிட்டு, கதை பேசிட்டுத்தான் பாடமும் படிக்கிறோம்” என்கிறார் அனாமிகா புன்னகையுடன்.
அனாமிகாவின் முயற்சியைப் பற்றித் தகவல் அறிந்த பலர், எழுதுபலகை, பாய்கள், நாற்காலிகள், ஆன்லைன் கிளாஸ் எடுக்க உதவியாக இரண்டு செல்போன்கள் என வாங்கித் தந்துள்ளார்கள். இங்கே பயிலும் குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வ அமைப்பு மாதந்தோறும் ஊட்டச் சத்துணவு வழங்கவும் ஆரம்பித்துள்ளது.
அனாமிகாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தேன். அந்தச் சின்ன அறை முழுவதும் நிறையக் கேடயங்கள், பதக்கங்கள் நிரம்பி வழிகின்றன. சமஸ்கிருதப் போட்டி, ஓட்டப் பந்தயம், கதை சொல்லும் போட்டி, பாட்டுப் போட்டி எனப் பல போட்டிகளில் வென்ற பரிசுகளாம் அவை.
அனாமிகாவின் அம்மா ஷாஜி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிக்குச் செல்கிறார். அப்பா சுதிர் கிடைத்த கூலி வேலைக்குச் செல்கிறார். மாதத்தில் பாதி நாட்கள் வேலையிருந்தாலே அதிசயம். கரோனா காலத்தில் அதிலும் சிக்கல்கள்.
இந்தச் சூழலிலும் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்வதற்கு எப்படி மனசு வந்தது என சுதிரிடம் கேட்டேன். “நாங்க பழங்குடிகள். மாசம் ரேஷன்ல 30 கிலோ அரிசி, பருப்பு, கொஞ்சம் மளிகைச் சாமான்கள் தர்றாங்க. இதுக்கு மேல என்ன வேணும். பள்ளிக்கூடம் ட்ராப் அவுட் ஆன ஆதிவாசிக் குழந்தைகள் பல பேரை 15 வருஷத்துக்கு முன்னாடி இளைஞர்கள் நாங்க எடுத்துத் திரும்பப் படிக்க வச்சிருக்கோம். நானே ஒரு ட்ராப் அவுட் மாணவன்தான். பிளஸ் 2 வரைக்கும் படிக்க நான் என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தெரியும்.
அதனால எங்க பிள்ளைகள் மட்டுமல்ல; எந்தப் பிள்ளைகளோட படிப்பும் கெட்டுடக் கூடாதுன்னு அனாமிகா கேட்டவுடனே இந்த ஏற்பாட்டை செஞ்சோம். இந்தக் குடிசையில்தான் போன வருஷம் வரை குடியிருந்தோம். 2 வருஷம் முன்பு பக்கத்துல இரண்டு அறைகளுடன் ஹாலோபிளாக்கில் வீடு கட்டிட்டோம். இந்தக் குடிசை இனி குழந்தைகளுக்கானது” என்றார் சுதிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT