Published : 29 Sep 2020 05:54 PM
Last Updated : 29 Sep 2020 05:54 PM
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தொடர்பான சந்தேகங்களுக்குத் தொலைபேசியில் தெளிவு பெற, கட்டுப்பாட்டு அறையைத் திறக்கத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண புதுச்சேரி, காரைக்காலில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 5-ம் தேதியில் இருந்தும், அதே போல் 9 மற்றும் 11-ம் படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 12-ம் தேதியிலிருந்தும் பள்ளிக்குச் செல்லலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (செப்.29), புதுச்சேரி கல்வித்துறைக்கும், ஆட்சியர் அருணுக்கும் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் நலனுக்காகச் சில உத்தரவுகளைச் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
அதன் விவரம்:
* பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் தொலைபேசியில் சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெறும் வகையில் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக அமைக்க வேண்டும்.
* கட்டுப்பாடு அறையின் எண் உடனடியாக வெளியிடப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
* கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டுத் தரம் மதிப்பிடப்படும். முக்கியக் கேள்விகள், அதற்கான பதில்களைச் செய்தியாகவும் தரவேண்டும்.
* சந்தேகத்துக்கு விளக்கம் தர கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் ஆசிரியர், மருத்துவர், போக்குவரத்துத் துறை அதிகாரி ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பு தொடர்பான விஷயங்களில் பெற்றோர், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாட்டு அறை வழிகாட்ட வேண்டும்.
* குழுவில் உள்ள மருத்துவர் சுகாதாரப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க முடியும், போக்குவரத்துத் துறையினர் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும், ஆசிரியர்கள் கல்வி தொடர்பானவற்றையும் தெளிவுபடுத்துவார்கள்.
* பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் கல்வித்துறை இயக்குநர் ஆன்லைனில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி அவர்களின் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
* கல்வித் துறையானது சுகாதாரத் துறையை அணுகி குழந்தைகள் பராமரிப்பு கோவிட் மையங்களை அமைக்கவும் கோரலாம். அதில் குழந்தைகளை மட்டும் பிரத்யேகமாகக் கவனித்து சிறப்புக் கவனத்தைத் தரச் செய்யலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT