Published : 29 Sep 2020 03:43 PM
Last Updated : 29 Sep 2020 03:43 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்க விரும்புவதாகப் பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோவை மாணவி எம்.எஸ்.சஸ்மிதா தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று (செப்.28) மாலை வெளியிட்டார். அதில் கோவை மாணவி எம்.எஸ்.சஸ்மிதா 199.67 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று, தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து மாணவி எம்.எஸ்.சஸ்மிதா கூறும்போது, ''எனக்கு சொந்த ஊர் நாமக்கல். தற்போது கோவை வடகோவை கவுலிபிரவுன் சாலையில் உள்ள வனத்துறைக் குடியிருப்பில் வசித்து வருகிறேன். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து 490 மதிப்பெண்கள் எடுத்தேன். அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேல்நிலை வகுப்பைப் படித்தேன். பிளஸ் 2 வகுப்பில் 989/1000 மதிப்பெண்கள் பெற்றேன்.
அதன் பின்னர் பொறியியல் படிக்க விரும்பி, விண்ணப்பித்தேன். தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. கணினி அறிவியல் படிக்க விரும்புகிறேன். அதன் பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என்னுடைய எதிர்கால லட்சியம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT