Published : 29 Sep 2020 12:18 PM
Last Updated : 29 Sep 2020 12:18 PM
நாடு முழுவதும் வரும் அக்.4-ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்வது எப்படி என்று மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியாளர் அறிவுரை கூறியுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்.4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கிடையே கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து அரசு கலைக் கல்லூரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றன. இங்கு பேராசிரியரும் பயிற்சியாளருமான பி.கனகராஜிடம் இலவசமாகப் படித்து, கடந்த 13 ஆண்டுகளில் 96 பேர் சிவில் சர்வீஸ் தேர்விலும், 4 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி, வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர்.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்கள் செய்ய வேண்டிய முன் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத்தலைவரும், இலவச ஐஏஎஸ் பயிற்சியாளருமான பி.கனகராஜ் கூறியதாவது:
''சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வாகும். இது பொது அறிவு, திறனறிவு என இரு தாள்களைக் கொண்டது. திறனறிவுத் தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவுத்தாள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அதே நேரத்தில் திறனறிவுத் தாளில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தரவரிசையை முடிவு செய்வதில்லை. பொது அறிவுத்தாளில் பெறும் மதிப்பெண்ணே தரவரிசையை நிர்ணயிக்கும். திறனறிவுத் தாளைப் பொறுத்தவரை வாய்மொழி பகுத்தறிவு, வாய்மொழி அல்லாத பகுத்தறிவு, எண் கணிதம், ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் அமையும். பொது அறிவுத்தாள் மிகவும் முக்கியமானது. பாடப் புத்தகங்கள், நாட்டு நடப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்திய வரலாறு, இந்தியப் புவியியல், உலகப் புவியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல், இந்தியக் கலாச்சாரம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும். நாட்டு நடப்புகள் குறித்து வினாக்கள் எழும்.
குறிப்பாக கரோனா பாதிப்பு குறித்துக் கேள்விகள் வரும். இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாகக் கரோனாவால் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எங்கு தோன்றியது, வைரஸ்-பாக்டீரியா வேறுபாடு, பெருந்தொற்று என்றால் என்ன?, உலக சுகாதார நிறுவனத்தின் பணிகள், தடுப்பூசி கண்டுபிடிப்பின் தற்போதைய நிலை, இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளும், அதன் சோதனை நிலைகளும், மத்திய மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகள், உலகில் அதிக பாதிப்புள்ள நாடுகள், கரோனாவால் உலக மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கேள்விகள் கேட்கப்படலாம்.
சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரை உலக சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்கா- சீனா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், கரோனா தொற்று உருவானதால் சீனா மீதான விமர்சனங்கள், சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சின்சியாங் மாகாணத்தில் பழங்குடிகள் மீதான ஒடுக்குமுறை, அண்டை நாடுகளுடன் சீனாவின் மோதல் போக்கு, இந்திய லடாக் எல்லையில் அத்துமீறல், தைவான் எல்லையில் சீனப் போர் விமானம் நுழைந்து அத்துமீறல் குறித்துக் கட்டாயம் கேள்விகள் வரும்.
சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை உலக வெப்ப மயமாதலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, இதனால் ஏற்படும் நோய்கள், கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 370-ன் படி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, கூட்டாட்சித் தத்துவத்தில் காணப்படும் பல்வேறு முரண்பாடுகள் குறித்து வினாக்கள் எழலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, சரக்கு மற்றும் சேவை வரியின் தற்போது நிலை குறித்தும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகள் குறித்துக் கேள்விகள் வரும். உலக வரலாற்றை விட, இந்திய வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பண்டைய வரலாறு குறித்து முதல்நிலைத் தேர்விலும், நிகழ்கால வரலாறு, சுதந்திரப் போராட்டம் குறித்து முதன்மைத் தேர்விலும் கேள்விகள் கேட்கப்படும்.
இவை பரந்துபட்ட பகுதி என்பதால், முக்கியமானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். இதை தினமும் அரை மணி நேரமாவது பயிற்சி செய்ய வேண்டும்.
வரும் நாட்களில் புதிதாக எதையும் படிக்கக் கூடாது. ஏற்கெனவே படித்தவை, எடுத்து வைத்துள்ள குறிப்புகளை மட்டுமே திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் எதுவும் புரியாது. எனவே ஆழமாகப் படிக்க வேண்டும். தெளிவான மனநிலையில், அமைதியாக இருக்க வேண்டும்''.
இவ்வாறு பேராசிரியர் கனகராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT