Published : 29 Sep 2020 07:03 AM
Last Updated : 29 Sep 2020 07:03 AM
‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியின் 2-வது அமர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கான்பூர் ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் டாக்டர் ஜெ.ராம்குமார், ‘ஐஐடி கல்வி மற்றும் வாய்ப்புகள்’ என்பது குறித்து பேசியதாவது:
பொதுவாகவே, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர விரும்புகிறார்கள். பொறியியல் என்று வரும்போது ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகும்.
இவற்றில் சேர ஜெஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஜெஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு நிலைகளை உள்ளடக்கியது.
ஐஐஐடி, என்ஐடி-யில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஆனால், ஐஐடியில் சேருவதற்கு ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத வேண்டும். ஜெஇஇ மெயின் தேர்வில் 1.5 லட்சம் ரேங்குக்குள் வரும் மாணவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வெழுத தகுதிபெறுகிறார்கள். ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஐஐடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஜெஇஇ நுழைவுத்தேர்வில் 80 சதவீத கேள்விகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து வருகின்றன. பாடங்களைப் புரிந்து படிப்பதும் தொடர் பயிற்சியும் இந்த தேர்வில் வெற்றிபெற உதவும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐஐடியில் நுழைவதுதான் கடினமாகஇருக்கும். நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று நுழைந்தால்போதும். மாணவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் எதிர்காலமும் பிரகாசமாக அமையும்,
நான் பணியாற்றி வரும் கான்பூர் ஐஐடியில் பிடெக் ஏரோஸ்பேஸ், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் மட்டுமின்றி 4 ஆண்டு கால பி.எஸ். (பேச்சிலர் ஆப் சயின்ஸ்) படிப்புகளும் (வேதியியல், பொருளாதாரம், கணிதம், கம்ப்யூட்டிங், இயற்பியல்) உள்ளன.
இவ்வாறு ராம்குமார் பேசினார்.
நிறைவாக, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.
இதன் அடுத்த அமர்வு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கடந்த 3 நிகழ்வுகளையும் தவறவிட்டவர்கள் https://bit.ly/2HBVgQR, https://bit.ly/2S293Sz, https://bit.ly/36gVTJF ஆகிய யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT