Last Updated : 28 Sep, 2020 01:15 PM

 

Published : 28 Sep 2020 01:15 PM
Last Updated : 28 Sep 2020 01:15 PM

கரோனா காலத்தில் அரசுப் பள்ளிகளில் கண்கவர் ஓவியங்கள்:  'பட்டாம்பூச்சிகள்' அமைப்பின் முன்னெடுப்பு

ஆசிரியர்களின் கைவண்ணத்தில் மிளிரும் தூமனூர் அரசு நடுநிலைப் பள்ளி.

மேட்டுப்பாளையம்

'பட்டாம்பூச்சிகள்' அமைப்பில் உள்ள ஆசிரியர்களின் கைவண்ணத்தால், கரோனா காலத்திலும் பல்வேறு அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் மிளிர்ந்து வருகின்றன .

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தூமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் கட்டிடங்களில் வர்ணம் பூசி ஓவியம் தீட்டும் பணியில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆசிரியர் குழுவினர். கட்டிடத்தின் முன்பக்கச் சுவற்றில் குழந்தைகளைக் கவரும் சோட்டா பீம், டோரா புஜ்ஜி, மிக்கி மவுஸ், பறவைகள், விலங்குகள், மரங்கள், பூச்செடிகள், பழங்கள் போன்றவற்றின் படங்கள் வரையப்பட்டிருந்தன.

வகுப்பறைகளில் வரலாற்றுப் பாடத்தை விளக்கும் வீணை, நாதஸ்வரம், மத்தளம் போன்ற இசைக் கருவிகள், கற்காலக் கருவிகள், அறிவியலை விளக்கும் மனித உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள், ஆய்வகங்களின் செயல்பாடுகள், அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் ஏ,பி,சி,டி எழுத்துகள்,அவற்றை விளக்கும் பொருட்கள், தமிழ் வார நாட்கள், மாத நாட்கள், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஸ்மைலிகள், தமிழின் அடிப்படையான உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், கணித எண்கள் என அனைத்து வகுப்பறைகளும் ஆசிரியர்களின் கைவண்ணத்தோடு ஓவியங்களால் ஒளிர்ந்தன. அவர்களைச் சந்தித்தோம்.

பட்டாம்பூச்சிகள் அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரும், திருப்பூர் பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியருமான ஏ.சந்தோஷ்குமார் கூறியதாவது:

''நாங்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறோம். கடந்த 2016-ம் ஆண்டு 'பட்டாம்பூச்சிகள்' என்ற அமைப்பைத் தொடங்கி, 'அரசுப் பள்ளிகளைக் காப்போம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

விடுமுறை நாட்களில் நாங்கள் ஒருங்கிணைந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, சுற்றுச்சுவர், வகுப்பறைகள், வெளிப்புறச் சுவர்களுக்கு வர்ணம் தீட்டி, கார்ட்டூன்கள், பாடத்திட்டம் சார்ந்த ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி வருகிறோம். மாணவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அவர்கள் மனதில் பதியும் வகையிலான அனைத்துப் பாடங்களின் அடிப்படைக் குறிப்புகளை வரைந்து வருகிறோம்.

இதுவரை தமிழகம் முழுவதும் 80 அரசுப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசி, ஓவியம் வரைந்துள்ளோம். சில இடங்களில் ஆசிரியர்கள் வர்ணம் பூசி வைத்து விடுவார்கள். நாங்கள் ஓவியம் மட்டும் வரைவோம். இதன்படி தூமனூர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகம், தூரிகை அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோரின் அழைப்பின் பேரில், ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜ்கிருஷ்ணன், ரவிச்சந்திரன், நாகராஜ், நாகேந்திரன் ஆகியோர் வந்து ஓவியத்தை வரைந்து முடித்துள்ளோம்.

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் 13 பள்ளிகளில் ஓவியம் வரைந்து முடித்துள்ளோம். இதைத் தொடர்ந்து இன்னும் சில பள்ளிகளில் இருந்து அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு செல்வதற்குத் தயாராகி வருகிறோம்''.

இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x