Published : 27 Sep 2020 03:38 PM
Last Updated : 27 Sep 2020 03:38 PM
பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண புதுச்சேரி, காரைக்காலில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள், அக்டோபர் 5-ம் தேதி முதலும், அதேபோல் 9 மற்றும் 11-ம் படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 12-ம் தேதி முதலும் பள்ளிக்கு வரலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் வாயிலாக ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, சுகாதாரத் துறைச் செயலாளரும் ஆட்சியருமான அருண், உயர் கல்வித்துறை இயக்குநர் ரெட்டி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்காலில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
" * புதுச்சேரி, காரைக்காலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தீர்வு காணலாம். அதேபோல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 12 முதல் பள்ளிகளுக்கு வரலாம்.
* மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம்.
* கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை.
* கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். போதிய தனிமனித இடைவெளியையும் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.
* தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துப் பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது அவசியம்".
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT