Published : 23 Sep 2020 02:25 PM
Last Updated : 23 Sep 2020 02:25 PM
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் பேராசிரியர்கள் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றவும், புதிதாகப் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கூட்டமைப்பு, பேராசிரியர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் பேராசிரியர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், உலக அளவில் பல்கலைக்கழகத்துக்கு இருக்கும் தரம் குறைந்துவிடும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாகும்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரிய நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லாமல் போகும். எனவே, பல்கலைக்கழகப் பெயரை மாற்றக்கூடாது என்று அரசுக்கு ஆளுநர் வலியுறுத்த வேண்டும். அத்துடன், சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்'' என்று முன்னாள் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT