Published : 23 Sep 2020 06:57 AM
Last Updated : 23 Sep 2020 06:57 AM

‘தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி புதிதாக தொழில் தொடங்கியபோது சந்தித்த சவால்கள்: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இளம் தொழில்முனைவோர்

சென்னை

புதிதாக தொழில் தொடங்கியபோது சந்தித்தசவால்கள் குறித்த அனுபவங்களை ‘இந்து தமிழ்திசை’ நடத்திய ஆன்லைன் நிகழ்ச்சி யில் இளம் தொழில்முனைவோர் பகிர்ந்து கொண்டனர்.

‘இந்து தமிழ் திசை’, பிரைட் மாடர்ன் ஸ்கூல்,பிரைன்ஃபீட் உடன் இணைந்து நடத்திய ‘தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ எனும் இளம் தொழில்முனைவோரின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ‘தாங்கள் தொழில்முனைவோர் ஆனது தேவை காரணமா அல்லது ஆர்வமா?’ என்ற தலைப்பில் கேஎஸ் கிச்சன் நிறுவனர் கேஷிகா மனோகர் (வயது 12), ஃபோர் சீசன்ஸ் பேஸ்ட்ரி நிறுவனர் எம்.கே.வினுஷா (வயது 10),தி ஃபர்ஸ்ட் ஸ்டெப் யுடியூப் சேனல் நிறுவனர்ஹாஷினி (வயது 12), மைலாட் ஆப் டெவலப்பர்ஆர்.ஜே.டி. கவுஷல்ராஜ் (வயது 16), அமெரிக்காவில் உள்ள ரிசைக்கிள் மை பேட்டரி நிறுவனர்நிஹல் (வயது 11) ஆகிய 5 இளம்தொழில்முனைவோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நேச்சுரல்ஸ் சலூன் அண்ட்ஸ்பா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சி.கே.குமரவேல் தனது அறிமுகவுரையில், “வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை இருக்கும். அந்த ஆசை லட்சியமாக மாற வேண்டுமானால் அதில் பேரார்வம் ஏற்பட வேண்டும். இளம் தொழில்முனைவோருக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். ஆனால், இந்திய சூழலில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை சற்று தாமதமாகவே வருகிறது. காரணம்.அவர்கள் பெற்றோரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைநாடுகளில் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் குழந்தைகள் தங்கள் பெற்றோரைச் சார்ந்திருப்பது இல்லை.

பள்ளி, கல்லூரிகளில் வாழ்வியல் திறன்கள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. நன்றாக படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் சராசரி மாணவர்களும் படிப்பில் பின்தங்கியவர்களும் பின்னாளில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். தொழில்தொடங்குவது என்பது நீண்ட பயணம் ஆகும். தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள தி டிவென்டீஸ் நிறுவன உரிமையாளர் லெனின்ஜேக்கப் பேசும்போது, "பிரத்யேக சிந்தனையும் பேரார்வமும் உடையவர்கள்தான் தொழில்முனைவோராக உருவாகிறார்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கு படைப்பாற்றலும், சிக்கலான விஷயங்கள் குறித்த சிந்தனையும் அவசியம். புதிய தொழில்முனைவோர் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்வது அவசியம்" என்றார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ்திசை’ சர்குலேஷன் பொது மேலாளர் டி.ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். தி ஃபர்ஸ்ட் ஸ்டெப் யுடியூப் சேனல் நிறுவனர் ஹாஷினி நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளின் குழு, சென்னை கல்கி ரங்கநாதன் மான்ட்ஃபோர்ட் பள்ளி, லால்குடி சாய் வித்யாலயா, குடியாத்தம் ஆர்யா வித்யாஷ்ரம், திருப்பதி எடிஃபை இன்டர்நேஷனல் பள்ளி, திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின. இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.youtube.com/c/TheFirstStepHasini என்ற லிங்க்கில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x