Published : 21 Sep 2020 05:41 PM
Last Updated : 21 Sep 2020 05:41 PM
சிதம்பரம் அருகே சி.மானம்பாடி கிராமத்தில் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லும் இருளர் இனக் குழந்தைகளுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.மானம்பாடி கிராமத்தில் வள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 27 பழங்குடி இருளர் இனக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்களிலிருந்து இதுநாள் வரை ஒரு குழந்தை கூட பள்ளிக்குச் சென்று கல்வி கற்காமல் தினசரி கூலி வேலைக்குச் செல்வது, ஆற்றில் மீன் பிடிப்பது, இறால் பிடிப்பது போன்ற அன்றாட வாழ்க்கையை அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், கல்வி கற்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து இருளர் மக்கள் தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
இருளர் மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் விழா இன்று (செப். 21) அப்பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கிள்ளையில் உள்ள இருளர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான அகராதி, நோட், பேனா போன்ற உபகரணங்களையும் வழங்கினார்.
பின்னர் சார் ஆட்சியர் மதுபாலன் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். இதனைத் தொடர்ந்து, இருளர் இன மக்களுக்கு அரசு செய்துவரும் நலத்திட்ட உதவிகள் பற்றியும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதால் அவர்கள் அறிவு வளரும், வாழ்க்கை மேம்படும் என்றும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT