Last Updated : 18 Sep, 2020 06:06 PM

 

Published : 18 Sep 2020 06:06 PM
Last Updated : 18 Sep 2020 06:06 PM

டெல்லி, கோவாவில் அடுத்த மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை: மேகாலயாவில் செப்.21-ல் திறக்க முடிவு

அடுத்த மாதம் வரை டெல்லி, கோவாவில் பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், மேகாலயாவில் செப்.21-ல் பள்ளிகளைத் திறக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வி ஆண்டான ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துப் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே பொதுமுடக்கத் தளர்வுகளை அண்மையில் வெளியிட்ட மத்திய அரசு, செப்.21 முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் கோவா மாநிலத்தில் அக்.2-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக பள்ளிகள் அக்.2 வரை திறக்கப்படாது. அக்.2-ம் தேதி அன்று மீண்டும் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

அதேபோல டெல்லி பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அக்.5-ம் தேதி வரையில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போலத் தொடர வேண்டும். ஆனால், கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட, ஆசிரியர்களும் ஊழியர்களும் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மேகாலயாவில் செப்.21-ம் தேதி முதல் படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சர் லேக்மேன் ரேம்புய், ''9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை அணுகலாம். அதேநேரத்தில் வழக்கமான வகுப்புகளோ, வகுப்பறை நிகழ்வுகளோ நடைபெறாது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x