Last Updated : 18 Sep, 2020 02:56 PM

 

Published : 18 Sep 2020 02:56 PM
Last Updated : 18 Sep 2020 02:56 PM

மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி

மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ராம்ராஜ்.

நாமக்கல்

நாமக்கல் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்துவது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். அன்றாடப் பாடங்களை மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பியும், அதன் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கின்றனர்.

இது பாராட்டுக்குரிய செயல் என்றாலும், ஆன்லைன் கல்வி என்பது எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியதாக உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அம்மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு ஆண்ட்ராய்ட் போன் என்பது எட்டாக் கனியாக இன்றளவும் உள்ளது.

அதனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் உருவாகிறது. அதேவேளையில் மாணவர்களின் நலன் கருதி ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் தங்களது சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் ராம்ராஜ் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அன்றாடப் பாடங்களைக் கற்பிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.இது மாணவர்களை மட்டுமன்றி அவர்களது பெற்றோரையும் மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் ராம்ராஜ் கூறுகையில், "6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் நடத்துகிறேன். பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்படுகிறது. இது நல்ல விஷயம் என்றாலும் ஆசிரியர்கள் நேரில் பாடம் கற்பிப்பது போல் இருக்காது.

எனவே, கடந்த 15 நாட்களாக மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். அதேபோல், மாணவர்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகள் உள்ளிட்டவையும் வழங்குகிறேன். 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வைச் சந்திப்பவர்கள் என்பதால் தற்போது அவர்களது வீடுகளுக்கு மட்டும் சென்று பாடம் நடத்தி வருகிறேன். ஆங்கிலப் பாடம் மட்டும் நடத்துகிறேன். 40 மாணவர்கள் என்னிடம் ஆங்கிலப் பாடம் பயில்கின்றனர்.

மாணவர்களை நேரில் சந்தித்துப் பாடம் நடத்துவது நல்ல பலனைத் தருகிறது. இதில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு சிறு பரிசுகளை வழங்கி வருகிறேன். கூடவே மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்துகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறேன். பள்ளி திறக்கும் வரை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்துவது தொடரும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x