Published : 18 Sep 2020 01:05 PM
Last Updated : 18 Sep 2020 01:05 PM

திருவாரூர் மாவட்டம் மாங்குடியில் 2 ஆண்டுகளாக செயல்படாத அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி: தனி வட்டாட்சியர் நடவடிக்கையால் 3 மாணவர்கள் சேர்ந்தனர்

பில்லூர் மாங்குடி ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி.

திருவாருர்

திருவாரூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களே சேராததால் செயல் படாமல் இருந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், பள்ளியில் நேற்று தனி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை முகாமில் 3 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பில்லூர் ஊராட்சி மாங்குடி கிராமத்தில், கடந்த 1956-ம் ஆண்டு முதல் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், இப்பள்ளியில் 4 மாணவர்கள் படித்துவந்தனர். தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட சேராததால், இந்தப் பள்ளி செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க திருவாரூர் மாவட்டச் செய லாளர் சுர்ஜித் கூறியதாவது: மாங் குடி ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பணிக்கு வராமலே கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தற்போது, கடந்த மாதம் 17-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாண வர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்த எந்த முயற் சியும் எடுக்கவில்லை. எனவே, இப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரி களிடம் விசாரித்தபோது, ‘‘அந்தப் பள்ளி மீது தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. நடவடிக்கை யையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

இதுகுறித்து மாங்குடி கார்த்திக் கூறியதாவது: நான் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். எனது 2 மகன்களையும் இதே பள்ளியில் படிக்க வைக்க விரும்பியபோதும், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத காரணத்தால், நான் உட்பட இப்பகுதி மக்கள் அனைவரும் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டோம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பலனில்லை என்றார்.

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாவதியிடம் கேட்டபோது, “மாங்குடி ஆதி திராவிடர் நலப்பள்ளியின் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆகியவை உள்ளன. இதன் காரணமாகவே, இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது” என்றார்.

இதனிடையே, இப்பள்ளியில் 2 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நன்னிலம் தனி வட்டாட்சியர் அன்பழகன் தலைமை யில் நடைபெற்ற இந்த முகாமில் 3 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x