Published : 17 Sep 2020 05:56 PM
Last Updated : 17 Sep 2020 05:56 PM
பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் கல்வி என்ற ஆய்வுக்குப் பிறகு மாணவர்களுக்கு 8 வார மாற்றுக் கல்வி அட்டவணை வெளியிடப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) ஆன்லைன் கற்பித்தல் மற்றும் பெருந்தொற்றுக் காலம் குறித்து ஆய்வு நடத்தியது.
இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என 34 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே மாற்றுக் கல்வி அட்டவணை தயாரிக்கப்பட்டது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, கல்வியை மகிழ்ச்சியான மற்றும் ஆர்வமான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை இந்த அட்டவணை வழங்குகிறது.
இந்த அட்டவணை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்கள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி, உருது மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதை வீட்டிலிருந்தவாறே பயன்படுத்தலாம். இணைய வசதி இல்லாதவர்களுக்கு குறுந்தகவல் சேவை அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT