Published : 15 Sep 2020 07:00 PM
Last Updated : 15 Sep 2020 07:00 PM
இணையதளம் மூலம் ஏப்ரல் பருவத்தேர்வு நடத்த சுந்தரனார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைவு மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதுநிலை, இளநிலை மற்றும் எம்.பில் இறுதிப் பருவ தேர்வுகளை கரோனா தொற்று காரணமாக குறித்த நேரத்தில் வழக்கம்போல் நடத்த இயலாத காரணத்தால், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்பேரில் ஏப்ரல் 2020 பருவத்தேர்வை மட்டும் இணையதளம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத் தேர்வுக்கான வழிமுறைகள்:
ஏப்ரல் 2020-ம் ஆண்டுக்கான இறுதிப்பருவ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் (நடப்பு மற்றும் தனித்தேர்வர்கள்) தங்களின் இருப்பிடத்திலிருந்தே தேர்வு எழுதி கொள்ளலாம். முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பிஎஸ்சி, பிசிஏ), எம்பில் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணிவரையிலும், இளநிலை கலை, வணிக செயலாட்சியியல் (பிஏ,பிபிஏ) மற்றும் பி.காம் மாணவர்களுக்கு பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும் தேர்வு நடைபெறும். மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுத ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்துக்குமுன் வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு எழுதி முடித்தபின் குறித்த நேரத்துக்குள் விடைத்தாளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வினாத்தாள் மற்றும் பிறபடிவங்களின் பதிவிறக்கம், விடைத்தாள் பதிவேற்றம் ஆகியவற்றுக்கு மட்டும் இணையதள வசதியுள்ள டெக்ஸ்டாப், மடிக்கணினி, அலைபேசி வசதியை உபயோகித்தால் போதுமானது. ஏப்ரல் 2020 ஆண்டுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயமாக பல்கலைக்கழக இணையதளம் (University Portal) மூலமாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் கையெழுத்திட்டு உள்ளே செல்ல ஒருமுறை பயன்படுத்தும் கடவு சொல் (OTP) எண், அவர்களின் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அலைபேசி எண்ணில் மாற்றம் இருந்தால் அந்தந்த கல்லூரியை அணுகி சரியான எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இணையவழி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் (Mock test) நாளை (16-ம் தேதி ) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். இந்த மாதிரி தேர்வு மூலமாக மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு திறம்பட தேர்வு எழுத இயலும்.
தேர்வு நேரத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்டுள்ள 30 நிமிடத்துக்குள் தேர்வு பதிவெண்ணைக் கொண்டு இணையதளத்திலிருந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் சிரமம் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், தாங்கள் பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு, மின்னஞ்சல், செய்தி பரிமாற்ற செயலி மூலம் வினாத்தாளை பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் கருப்பு நிறம், ஊதா நிறத்திலான மையையே பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பக்க எண் வரிசையில் சரிபார்த்து பிடிஎப் வடிவில் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குரிய ஒப்புதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பதிவேற்றம் செய்ய இயலாத இணையதள வசதி குறைந்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் மட்டும் விடைத்தாள்களை உறையில் இட்டு தங்களது கல்லூரியில் சமர்ப்பித்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
மிக முக்கியமாக அனைத்து தேர்வுகளும் முடிந்த பின்னர், மாணவர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்த அனைத்து விடைத்தாள்களையும் ஒரே உறையிலிட்டு ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் மூலமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 627012, தொலைபேசி எண் 0462-25636121 என்ற முகவரிக்கு அக்டோபர் 3-ம் தேதிக்குமுன் அனுப்பி வைக்க வேண்டும்.
எந்த சூழலிலும் மாணவர்கள் தங்கள் கைவசம் விடைத்தாள்களை வைத்திருக்கக் கூடாது. தேர்வு அட்டவணை விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT