Last Updated : 14 Sep, 2020 02:42 PM

 

Published : 14 Sep 2020 02:42 PM
Last Updated : 14 Sep 2020 02:42 PM

பள்ளி நூலகப் புத்தகங்களை இரவலாக மாணவர்களுக்குத் தர உத்தரவு; சிறந்த மதிப்புரைகளுக்குப் பரிசு: புதுச்சேரியில் முடிவு

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி நூலகங்களிலுள்ள புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு இரவலாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புத்தகத்தைப் படித்து முடித்து, பள்ளி திறந்த பின்பு சமர்ப்பிக்கப்படும் மதிப்புரைகளுக்குப் பரிசுகள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள், நூலகங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வின்போது கோயில்கள், ஓட்டல்கள் தொடங்கி மதுபானக் கடைகள் வரை திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி தொடங்கி பல விஷயங்களில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் இன்னும் நூலகம் மட்டும் திறக்கப்படவில்லை. ஐந்து மாதங்களாக நூலகம் திறக்கப்படாததால் தினசரி நாளிதழ்கள், வார இதழ்களைப் படிக்க முடியாமல் பல வாசகர்களும் தவிக்கின்றனர். நூல்களை எடுத்துச் சென்று விட்டுத் திருப்பி தரமுடியாமல், பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

ஏராளமான மாணவ, மாணவிகள் நூல்களை எடுத்து வந்து படிப்பதுடன், போட்டித்தேர்வுக்குத் தயாராகத் தேவையான நூல்களை வாசிக்க முடியாமல் உள்ளனர். மேலும் ரோமன் ரோலன்ட் நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள நூலகங்களும் குழந்தைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளன.

இந்நிலையில் பள்ளி நூலகங்களிலுள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு இரவலாகத் தருமாறு, புதுச்சேரி கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சர் கமலக்கண்ணன் அலுவலகத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாணவ, மாணவிகளின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை இரவலாகத் தர உத்தரவிட்டுள்ளோம். குழந்தைகள் அப்புத்தகங்களைப் படித்து ஓரிரு பக்க மதிப்புரைகளை எழுதலாம். பெற்றோர் உதவி தேவைப்பட்டாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதிப்புரைகளைப் பள்ளி திறந்த பின்பு சமர்ப்பிக்கலாம். பள்ளியில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த மூன்று மதிப்புரைகளுக்குப் பரிசுகள் தரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x