Published : 08 Sep 2020 09:26 PM
Last Updated : 08 Sep 2020 09:26 PM
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக சொந்த ஊர் திரும்பிய சீனாவில் படித்துவந்த இந்திய மாணவர்களைத் தங்களுடைய கல்லூரியுடன் இணையம் மூலம் தொடர்பில் இருக்கும்படி சீனா மற்றும் இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள். இவர்களில் 21 ஆயிரம் பேர் சீனாவில் மருத்துவம் படித்து வருவதாகக் கடந்து ஆண்டு வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் இந்தியா திரும்பிய இந்த மாணவர்கள் மீண்டும் சீனாவுக்குச் செல்வது எப்போது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையவழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை வெளிநாட்டு மாணவர்களை சீனா அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் தங்களுடைய நாட்டில் படித்து வந்த வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கு உத்தரவாதம் அளிப்பதாக இந்தியத் தூதரகத்திடம் சீனக் கல்வி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக சீனக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை:
''தங்களிடம் படிக்கும் மாணவர்களுடன் சீனப் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அந்த மாணவர்களுக்கு உரிய தகவல்களை அவ்வப்போது முறையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த இக்கட்டான காலம் கருதி இணையம் வழியாகத் தொடர்ந்து பாடங்கள் நடத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். கரோனா பெருந்தொற்றுப் பரவலின் தாக்கம் விலகி இயல்புநிலை திரும்பும் நாள் இதுவரை தெரியவில்லை. ஆகையால் வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் சீனக் கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பது எப்போது என்பதும் முடிவு செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சீனாவில் இந்திய மாணவர்கள் தாங்கள் படித்து வரும் சீனக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுடன் இணக்கமான தொடர்பில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு சீனக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மேற்கொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ள பெய்ஜிங் தூதரகத்துடன் தொடர்புடைய இந்திய மாணவர்கள் www.eoibeijing.gov.in என்ற இணையதளம், @EOIBeijing என்ற ட்விட்டர் பக்கம், India in China என்ற முகநூல் பக்கம், indiainchina என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஆகியவற்றைப் பின்தொடரும்படி அறிவுறுத்தி இருக்கிறது. ஷாங்காய் தூதரகத்துடன் தொடர்புடைய இந்திய மாணவர்கள் www.cgishanghai.go.in என்ற இணையதளம், @IndiainShanghai என்ற ட்விட்டர் பக்கம், @cgishanghai என்ற முகநூல் பக்கம் ஆகியவற்றைப் பின்தொடரும்படி அறிவுறுத்தி இருக்கிறது. குவான்சோ தூதரகத்துடன் தொடர்புடைய இந்திய மாணவர்கள் www.cgiguangzhou.gov.in என்ற இணையதளம், @cgiguangzhou என்ற ட்விட்டர் பக்கம், @IndiaGuangzhou என்ற முகநூல் பக்கம் ஆகியவற்றைப் பின்தொடரும்படி இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT