Published : 08 Sep 2020 11:38 AM
Last Updated : 08 Sep 2020 11:38 AM
ஒருங்கிணைந்த கல்விப் படிப்புகள், பல்துறை சார் பயிற்சிகள் அடங்கிய புதிய பாடத்திட்டம் ஆசிரியர் பயிற்சி கல்வியில் 2021-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். இணையம் வழி நடத்தப்பட்ட, ‘உயர்கல்வி மேம்பாட்டில் தேசியக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார். உயர் தரக் கல்வி 2030-ம் ஆண்டில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசக் கல்வி அமைச்சர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:
''உயர் கல்வியின் ஒரு பகுதி ஆசிரியர் பயிற்சிக் கல்வியாகும். ஆகையால் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்த கல்விப் படிப்புகளையும் பல்துறை சார் பயிற்சிகளையும் இனி வழங்கத் தொடங்கலாம். அதற்கு முன்னதாக பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பள்ளிகளும் ஆசிரியர் பணிக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அறிவில் சிறந்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். மகத்தான இந்தப் பணிக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையின் மையம் ஆசிரியர்களே. ஆகையால் 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர் பயிற்சிக் கல்வி மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாகப் பல மாறுதல்களை புதிய கல்விக் கொள்கை முன்மொழிந்துள்ளது. இதன்படி 2030-ம் ஆண்டு வாக்கில் ஆசிரியருக்கான அடிப்படைத் தகுதி நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட். பட்டமாக மாற்றப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக, நான்கு தாள்கள் கொண்டு பள்ளிக் கல்விக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று வட்டார மொழி அறிவை நிரூபிக்க வேண்டும்.
எதிர்காலத்துக்கான கல்வி அமைப்பை இந்தியக் கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பண்பாட்டில் காலூன்றி இருக்க வேண்டும். ’தேசிய கல்விக் கொள்கை 2020’ மூலம் ‘அறிவில் வல்லரசு’ நாடாக இந்தியா உயரும். அதேபோல கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் தன்னாட்சி நிலை பெறுவார்கள். தரமான கல்வி நிறுவனங்களை முன்னிலைப்படுத்த தன்னாட்சித் தகுதியும் தரவரிசையில் அளிக்கப்படும்''.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT