Published : 07 Sep 2020 01:28 PM
Last Updated : 07 Sep 2020 01:28 PM
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர், பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் முகாமிட்டு அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு உடனுக்குடன் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் மாத அட்டவணை தயாரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இணையதள வசதி, தொலைக்காட்சி மற்றும் மின்சார வசதி இல்லாத கோவை மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தினேஷ்ராஜா, அசாருதீன், நேரு கல்லூரி மாணவர் ரமேஷ் கண்ணா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆனைமலை பகுதியில் பழங்குடியினர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, 'ஆனைமலை பகுதியில் கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், எல்எஃப் காலனி, நெல்லித்துறை, மன்னம், புளியங்கண்டி, வேட்டைக்காரன் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பம்பதி, கல்லாங்குத்து, அண்ணாநகர், பாரதி நகர், சர்க்கார்பதி, ஜெஜெ நகர், கோபால்பதி ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தோம். பின்னர் பழங்குடியின மாணவர்களை ஒருங்கிணைந்து அவர்களுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பாடம் நடத்தி வருகிறோம்.
மாணவர்கள் மீது கவனம் செலுத்தாவிட்டால் இடைநிற்றல் ஏற்படும். சிலர் கூலி வேலைக்குச் செல்வதையறிந்து வேதனை அடைந்தோம். பின்னர் இங்குள்ள மலைவாழ் மக்கள் சங்கத்தினருடன் இணைந்து மாணவர்களை ஆங்காங்கே ஒருங்கிணைத்து வகுப்பு நடத்தி வருகிறோம். பழங்குடியின மாணவர்களுக்கு இந்த வகுப்பைத் தொடர்ந்து நடத்துவதற்கு அங்குள்ள உள்ளூர் பட்டதாரி மாணவர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிலர் வகுப்பு நடத்த முன் வந்துள்ளனர்.
ப்ரொஜக்டர் வசதி இருந்தால் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வசதியாக இருக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்க உள்ளோம். கோவை மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளிக் குழந்தைகள் இதே நிலையில் உள்ளனர். கல்லூரி மாணவர்கள் குறைந்தபட்சம் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள குழந்தைகளுக்காவது பாடம் நடத்த முன்வர வேண்டும்' என்றனர்.
இதுகுறித்துத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறும்போது, ''மாணவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கு தங்கியிருந்து இங்குள்ள பழங்குடியினக் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துகின்றனர். அவர்களால் எவ்வளவு நாளைக்கு வகுப்பு நடத்த முடியும் என்று தெரியவில்லை. எனவே உள்ளூர் இளைஞர்களை அணுகி வருகிறோம். பின்தங்கிய நிலையில் உள்ள இக்குழந்தைகளின் படிப்பு தடைபடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை உதவிக்கரம் நீட்ட வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT