Last Updated : 07 Sep, 2020 11:56 AM

 

Published : 07 Sep 2020 11:56 AM
Last Updated : 07 Sep 2020 11:56 AM

பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் செப். 21 முதல் இறுதி செமஸ்டர் தேர்வு: மாணவர்களைத் தயார்படுத்த உத்தரவு

கோவை

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு செப். 21-ம் தேதி தொடங்குகிறது. மாணவர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்த அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டில் இறுதியாண்டு படித்த மாணவர்களுக்கான கடைசி செமஸ்டர் தேர்வானது கரோனா விடுமுறை காரணமாக இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இதேபோல் அரியர் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக செப். 15-க்குப் பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். தற்போது அதற்கான பணிகளில் பல்கலைக்கழகங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான கடைசி செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொ) ஆர்.விஜயராகவன், அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி கல்லூரிகள் நீங்கலாக, மற்ற இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் செப். 21-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைகிறது.

இதற்கான தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் இது குறித்த தகவலை, இறுதியாண்டு மாணவர்களுக்குத் தெரிவித்து அவர்களைத் தேர்வுக்குத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x