Published : 05 Sep 2020 03:47 PM
Last Updated : 05 Sep 2020 03:47 PM
அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்குமாறு தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். குழந்தைகளின் கல்வி தடைப்படாமல் இருக்க, கட்டணமின்றி அரசு செலவில் படிக்க வைக்க முன்வருமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறார்.
மாணவர் சேர்க்கை
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணார்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தற்போது 242 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம் தேதி தொடங்கியது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.சிவசுப்பையா தலைமையிலான ஆசிரியர்கள், சுற்றுவட்டார கிராமங்களில் மாணவர்களைச் சேர்க்கப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்துத் தலைமை ஆசிரியர் ச.சிவசுப்பையா கூறியதாவது:
“அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்த படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கு இது தெரிவதில்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் அவர்கள், தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கத் தயங்குகின்றனர்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் படிக்க முடியும் என்பதை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து பிரச்சார வாகனம் மூலமாகக் கிராமங்களுக்குச் சென்று வீடு, வீடாகப் போய் மக்களைச் சந்தித்து வருகிறேன். சிக்காரம்பாளையம், கண்ணார்பாளையம், காரமடை, கருப்புசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களைச் சந்தித்து வருகிறோம். பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, ஜியாமென்ட்ரி பாக்ஸ், கல்வி உதவித்தொகை, சீருடை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
80 பேர் சேர்ந்தனர்
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மாலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.1000, 300-க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.1,500, 400-க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.ஞானசேகரன் சார்பில் வழங்கி வருகிறோம்.
நேரடிப் பிரச்சாரத்தால் தற்போது 80 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். எங்கள் பள்ளி மட்டுமின்றி எந்த அரசுப் பள்ளியாக இருந்தாலும் அங்கு தங்கள் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்” என்று கண்ணார்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் ச.சிவசுப்பையா உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT