Published : 03 Sep 2020 12:59 PM
Last Updated : 03 Sep 2020 12:59 PM
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், மூடப்படும் அபாயத்தில் உள்ள 41 பி.எட். கல்லூரிகள் காப்பாற்றப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகள்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகள் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் அங்கீகாரம் பெறுவதற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நிலுவையில் வைத்துள்ள கல்லூரிகள் மற்றும் தகுதிகள் குறைவாக உள்ள கல்வியியல் கல்லூரிகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதில் தமிழகத்தில் கோவை, வேலூர், சைதாப்பேட்டை ஆகிய 3 அரசு கல்வியியல் கல்லூரிகள் உட்பட 41 கல்லூரிகள் அடங்கும். “உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது” என்று அந்த நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலைக் கல்லூரிகளில் எம்.எட். கல்வித் தகுதியுடன் பணிபுரியும் ஆசிரியர்களை, அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையாக, ''எம்.எட். கல்வித்தகுதியுடன் செட், நெட் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி மற்றும் பிஎச்.டி. கல்வித்தகுதியுடைய உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பட்டியலைத் தயார் செய்து அனுப்ப வேண்டும்'' என்று அனைத்து அரசு கலைக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கல்லூரி ஆசிரியர்களின் நிலைப்பாடு
இது குறித்து அரசு கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ''தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2007-ம் ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். எம்.எட்., செட் அல்லது நெட் தகுதித் தேர்வுத் தேர்ச்சி, பிஹெச்.டி. படிப்பு ஆகியவற்றை 'கல்வியியல்' பாடத்தில் நிறைவு செய்தவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியத் தகுதியானவர்கள். இவர்களில் சிலர் அரசு கலைக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுச் சென்றதால், கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இத்தகைய கல்வித்தகுதியுடைய ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் கலைக் கல்லூரிகளில் இருந்து கல்வியியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். கல்வியியல் கல்லூரிகளில் இருந்து அரசு கலைக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களை மீண்டும் கல்வியியல் கல்லூரிகளுக்கே நியமனம் செய்ய உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
கல்வியாளர்கள் சிலர் இதுகுறித்து, ''தனியார் கல்வியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை சில கல்லூரிகள் எவ்வித உள்கட்டமைப்பு வசதியுமின்றியும், உரிய தகுதிகள் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டும் செயல்பட்டு வருகின்றனர். மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளே நடத்தாமல் அவர்களைத் தேர்வு மட்டும் எழுத அனுமதித்து பட்டம் பெற வைக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் கல்வித்தரம், நாளைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
தமிழகத்தில் அதிகளவில் கல்லூரிகளைக் கொண்ட ஒரே பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் ஆகும். சுமார் 750 கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது. ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தது போல், இந்த பல்கலைக்கழகத்தையும் பிரித்து நிர்வகித்தால் மட்டுமே, கல்வியியல் கல்லூரிகளின் குளறுபடிகளைக் களைய முடியும்'' என்ன்றனர்.
மூத்த கல்வியாளர் கருத்து
இது குறித்து முன்னாள் துணைவேந்தரும், மூத்த கல்வியாளருமான இ.பாலகுருசாமி கூறும்போது, ''நல்லதொரு மாணவர் சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும். நாளை ஆசிரியர்களாகப் பணிபுரியும் இன்றைய கல்வியியல் மாணவர்கள் இத்தகைய சூழல்களைக் கடந்து வருவது எதிர்காலக் கல்வித் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கி விடும்.
எனவே நோட்டீஸ் அனுப்பியதோடு நிறுத்தி விடாமல், விதிமுறைகளைப் பின்பற்றாத கல்லூரிகளை மூடுவதே சிறந்தது. இதனால் மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள். அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆய்வு செய்து, தரமான உள் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT