Published : 02 Sep 2020 12:21 PM
Last Updated : 02 Sep 2020 12:21 PM
குஜராத்தில் 45% மாணவர்கள் முதல் நாளில் ஜேஇஇ தேர்வை எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு செப் 1-ம் தேதி (நேற்று) தொடங்கியது. இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9.53 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இளங்கலைக் கட்டிடவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நேற்று காலை 9 முதல் 12 மணி வரை நடைபெற்றது. இப்படிப்புக்காக இந்த ஆண்டு 1,38,409 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மதியம் 3 முதல் 6 மணி வரை பி.ப்ளானிங் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. இந்தப் படிப்புக்காக 59,003 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
குஜராத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 32 தேர்வு மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ஜேஇஇ தேர்வை எழுத 38,167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே, முதல் நாள் தேர்வுக்கு 3,020 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 1,664 மாணவர்கள் அதாவது 55 சதவீதம் பேர் மட்டுமே வந்திருந்தனர். மீதமுள்ள 1,356 பேர் தேர்வெழுத வரவில்லை. இத்தகவலை ஜேஇஇ தேர்வு ஒருங்கிணைப்பாளர் வீரேந்திர ராவத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
''கடந்த ஆண்டுகளில் வழக்கமாக 25 முதல் 30 சதவீத மாணவர்கள் தேர்வெழுத வர மாட்டார்கள். இந்த ஆண்டு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என்றும் ராவத் கூறினார்.
முதல் நாளில் மேற்கு வங்கத்தில் தேர்வெழுத மையங்களுக்குச் சென்ற ஜேஇஇ தேர்வர்கள் கடுமையான மழை மற்றும் குறைவான போக்குவரத்து வசதியால் சிரமப்பட்டனர். உள்ளூர் ரயில் போக்குவரத்துச் சேவை இல்லாதது அவர்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT