Last Updated : 01 Sep, 2020 01:19 PM

 

Published : 01 Sep 2020 01:19 PM
Last Updated : 01 Sep 2020 01:19 PM

கோவை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் நர்சிங் பாடப்பிரிவு தொடக்கம்: மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு

பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வழங்கிய தலைமை ஆசிரியர் ச.சாக்ரடீஸ் குலசேரகன்.

அன்னூர்

கோவை கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நர்சிங் பாடப்பிரிவு தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நடப்புக் கல்வியாண்டில் இப்பள்ளியின் பிளஸ் 1 வகுப்பில் நர்சிங் பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், நர்சிங், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய இப்படிப்புக்குத் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்துத் தலைமை ஆசிரியர் ச.சாக்ரடீஸ் குலசேகரன் கூறியதாவது:

''இப்பள்ளி 2011-2012 ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீதத் தேர்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு, பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது. தற்போது 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், பேருந்து பயண அட்டை, வரைபடம் (அட்லஸ்), கணித உபகரணப்பெட்டி, புத்தகப்பை, மிதிவண்டி, மடிக்கணினி, கல்வி உதவித்தொகை ஆகிய அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

காற்றோட்டமான கட்டிட வசதி, சீர்மிகு வகுப்பறைகள், தூய குடிநீர், கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி பயிற்சி வகுப்புகள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, நவீன ஆய்வகங்கள், ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்குச் சிறப்பு வகுப்புகள், கராத்தே, ஜூடோ ஆகிய தற்காப்புப் பயிற்சிகள் போன்றவை இப்பள்ளியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அன்னையர் குழுக்கள் ஆகிய பள்ளி வளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன''.

இவ்வாறு சாக்ரடீஸ் குலசேகரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x