Published : 01 Sep 2020 12:19 PM
Last Updated : 01 Sep 2020 12:19 PM
'அரியர்ஸ் வைத்தோரை ஆல்பாஸ் ஆக்கிய வள்ளலே' என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் பதாகைகளை வைத்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விட்டு வாய்ப்பைப் பறிகொடுத்த மாணவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தவிக்கின்றனர்.
தேர்வுக் கட்டணம் செலுத்தித் தேர்வுக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 28-ம் தேதி அறிவித்தார் முதல்வர். இது செமஸ்டர் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவிவந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது பல்வேறு மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னும் சில மாணவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் ஜே.ஆர்.வி.எட்வர்ட் 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறுகையில், ''அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் செலுத்தும் இறுதி நாளாக கடந்த மார்ச் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதியே திடீரெனப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரிகளும் விடுதிகளும் மூடப்பட்டன. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் விடுதிகளில் தங்கிப் படித்து வந்த பிற மாநில மாணவர்கள் அதிர்ச்சியுடன் விடுதிகளைக் காலிசெய்து சொந்த ஊர்களுக்குச் சென்றார்கள்.
இவர்களில் விரைவில் நிலைமை சீராகும், அப்போது வந்து கல்விக்கட்டணம் செலுத்தலாம் என நம்பிச் சென்றவர்கள் அதிகம். ஆனால், பொது முடக்கம் கட்டுக்கடங்காமல் நீடித்தது. பொதுப்போக்குவரத்து சேவையும் முடங்கியது. கல்லூரிகளும் திறக்கப்படாத சூழலில் தேர்வுகள் குறித்து பல்கலைக்கழகங்களும் எதுவும் அறிவிக்கவில்லை.
தேர்வுக் கட்டணம் குறித்தும் ஊடகங்களில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவரவர் படிக்கும் கல்லூரியின் வாயிலாகத்தான் தேர்வுக்கட்டணம் செலுத்தமுடியும் என்னும் நிலையில் வெளியூர் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பொதுப்போக்குவரத்து அடியோடு முடங்கிய நிலையில் கல்லூரிக்குச் சென்று தேர்வுக் கட்டணம் செலுத்துவதும் சாத்தியம் இல்லாமல் போனது. தனி தேர்வர்களுக்கும் இதே நிலைதான். தேர்வுகள் குறித்த தெளிவான அறிவிப்புகளும் பல்கலைக்கழகங்களிடமிருந்து வரவில்லை.
இப்படியான சூழலில்தான் தேர்வுக்கட்டணம் செலுத்தியோருக்கான தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் குழப்பம் இருந்திருக்காது. வெகுசில கல்லூரி நிர்வாகங்கள் மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வுக் கட்டணங்களையும் அவர்களாகவே பின்பு வசூலித்துக் கொள்ளலாம் எனக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
அதேபோல், நீதிமன்ற உத்தரவுப்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியாக வேண்டும். இதனால் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் இந்தத் தேர்வுகளையும் எழுதமுடியாத நிலை உள்ளது. இதனால் இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை இந்த அறிவிப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதே அனைவருக்குமான நீதியாகும்.
தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும் விலக்கு அளித்து மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT