Published : 01 Sep 2020 06:55 AM
Last Updated : 01 Sep 2020 06:55 AM
புதிய கல்விக் கொள்கையால் கல்வித் துறையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ஆன்லைன் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள ‘புதிய கல்விக் கொள்கை -2020’-ன் முக்கிய அம்சங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரி, வேலூர் ஸ்ப்ரிங்டேஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல் ஆகியவற்றுடன் இணைந்து ‘புதிய கல்விக் கொள்கை - 2020 ஏற்றமா, இறக்கமா?’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியை கடந்த 30-ம் தேதி நடத்தியது. இதில் பிரபல கல்வியாளர்கள் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் டாக்டர் இ.பாலகுருசாமி:
புதிய கல்விக் கொள்கை - 2020 குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லை. விமர்சிப்பவர்கள் அதை முழுமையாகவே படித்திருக்க மாட்டார்கள். இந்தியாவுக்கு கல்விக் கொள்கை தேவையா? ஏற்கெனவே ஒரு கல்விக் கொள்கை இருக்கும்போது புதிதாக இன்னொன்று எதற்கு? என்றெல்லாம் கேட்கின்றனர்.
கல்வியின் நோக்கம் வெறும் பட்டதாரிகளை உருவாக்குவது அல்ல. மாறாக, படைப்பாளிகளை, சிந்தனையாளர்களை, சமூக அக்கறை உள்ளவர்களை உருவாக்குவதுதான். உலக அளவில் கல்வியில் இந்தியா பின்தங்கியுள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் 130-வது இடத்தில் நம் நாடு இருக்கிறது. இந்தியாவில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மிக மிக குறைவு. ஆராய்ச்சியில் நமது பங்களிப்பு வெறும் 4 சதவீதம் மட்டுமே. அதேபோல, கண்டுபிடிப்பில் நமது பங்களிப்பு வெறும் 0.3 சதவீதம்தான். அதேநேரம், கண்டுபிடிப்பில் சீனாவின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது பெருமை தரக்கூடியது அல்ல.
இந்த சூழலில், உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கையை 26 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தமத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்தகைய நோக்கங்களை நிறைவேற்ற உருவாக்கப்பட்டதே புதியகல்விக் கொள்கை. மனப்பாடக் கல்விமுறை இல்லாமல், குழந்தைகளின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில்கல்வி அமைந்திருக்கும். படைப்பாற்றல், கேள்வி கேட்கும் ஆற்றலை அது மேம்படுத்தும். அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.
3, 5, 8 வகுப்புகளுக்கு தேர்வு வைக்கப்படுவதை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பொதுத் தேர்வுஎன்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இந்தவகுப்புகளுக்கு வாரியம் மூலமாகஅல்லாமல் உள்ளூர் அளவில்தான் தேர்வு நடத்தப்படும். எப்போதும்போல, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும்தான் பொதுத் தேர்வு நடத்தப்படும்.
மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடங்களை விருப்பம்போல தேர்வு செய்துகொள்ளவும் மேல்நிலைக் கல்வியில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இன்னொரு முக்கிய அம்சம், தொழிற்கல்வி. தங்களுக்கு விருப்பான ஏதேனும் ஒரு தொழில் பயிற்சியை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதை குலக்கல்வி முறை என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால பி.எட். படிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் கூடுதலாக ஏதேனும் ஓர் இந்திய மொழியை படிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டப் படிப்புகாலம் 4 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. படிப்பு காலத்துக்கு ஏற்ப முதல்ஆண்டு சான்றிதழ் பட்டம், 2-ம் ஆண்டுடிப்ளமா பட்டம் என்று வெவ்வேறு பட்டங்கள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. படைப்பாற்றல், சிக்கல்களுக்குதீர்வு காணும் திறன், கண்டுபிடிக்கும் திறன், ஆராய்ச்சி ஆகிய 4 சாராம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில்குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் கற்றலுக்கும், வயது வந்தோர் கல்விக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கல்விக்கு 6 சதவீதமும், ஆராய்ச்சிக்கு 2 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது அற்புதமான, தனித்துவமிக்க கல்விக் கொள்கை ஆகும்.
டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர் நிறுவனரும், கல்வியாளருமான டி.நெடுஞ்செழியன்:
புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள சீர்திருத்தங்களை அமல்படுத்தும்போது ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உருவாகும். கல்வி நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஆரம்பக் கல்வியில் பயிலும் குழந்தைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே நடுநிலைக் கல்விக்கு செல்கின்றனர். மற்றவர்கள் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகின்றனர்.
புதிய மொழிகள் கற்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மொழி ஆசிரியர்களை எப்படி நியமிப்பார்கள்? அரசு பள்ளிகளில் இன்னும் உள்கட்டமைப்பு வசதிகளே சரியாக இல்லை.
கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகார நடைமுறை கைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் படிப்பை விட்டு, பின்னர் மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர்வது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை.
பிளஸ் 2-க்கு பிறகு கலை, அறிவியல் படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஒரு தேர்வுமூலமாகவே மாணவர்களின் திறமையை அறிந்துகொள்ள முடியாது. இன்றைக்கு ஒரு பாடத்தை சுமாராக படிக்கும் மாணவர்கள் நாளைக்கு சிறப்பாக படிக்கக்கூடும். நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை வகைப்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல. ஆராய்ச்சியை பொருத்தவரை, கல்லூரிகளில் இல்லாமல் பள்ளி அளவிலேயே அதை கொண்டுவர வேண்டும்.
சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி கே.சீனிவாசன்:
கல்விக் கொள்கையில் ஆரம்பநிலைக் கல்வி அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போல 3, 5, 8 வகுப்புகளுக்கும் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தேசிய திறந்தநிலை பள்ளித் திட்டம் அல்லது மாநில அளவில் ஏற்படுத்தப்படும் மாநில திறந்தநிலை பள்ளித் திட்டத்தில் சேர்ந்து தேர்வு எழுதி, பின்னர் மீண்டும் பள்ளியில் படிப்பை தொடரலாம்.
தேர்வு என்பது வடிகட்டல் அல்ல. மாணவர்கள் என்ன படித்துள்ளனர் என்பதை அறியும் மதிப்பீடு. ஆரம்பக் கல்வி வரை தாய்மொழி வழிக் கல்வி, தேவைப்பட்டால் அதை நடுநிலைக் கல்வி வரை நீட்டிக்கும் வாய்ப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை இருமொழி வழியில் பாடம் பயிற்றுவிப்பு ஆகியவை வரவேற்கக்தக்க அம்சங்கள். புதிய மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பல மொழிகள் கற்பது மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். கணித ஒலிம்பியாட் போல ஒவ்வொரு பாடத்திலும் ஒலிம்பியாட் போட்டிகள், அதுவும் அந்தந்த பிராந்திய மொழிகளில் நடத்தப்படுவது மாணவர்களின் உயர் சிந்தனை திறனை மேம்படுத்தும். தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால பி.எட். பட்டப் படிப்பு, ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று ஐஇஎஸ் (இந்திய கல்விப் பணி) போன்ற புதுமையான திட்டங்கள் கல்வியின் தரத்தை நிச்சயம் மேம்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிறைவாக, புதிய கல்விக் கொள்கைகுறித்து மாணவர்கள், பெற்றோர், சமூகஆர்வலர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சியாளரும், கல்வியாளருமான நித்யா செல்வகுமார் நெறிப்படுத்தினார். இதில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/3gJ4Ywn என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT