Published : 31 Aug 2020 06:11 PM
Last Updated : 31 Aug 2020 06:11 PM
கரோனா பேரிடர்க் காலத்தில் மாணவர்களின் நலம் கருதி கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வைத் தவிர்த்து ஏனைய அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி புதுச்சேரி அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கும் பாஜக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பாஜக மாநிலத் தலைவர் எம்எல்ஏ சாமிநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கரோனா வேகமாகப் பரவி வரும் இச்சூழலை கருத்தில் கொண்டும் மாணவர்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கும் பொருட்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எனப் புதுச்சேரியில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளும் இறுதி செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து அனைத்து செமஸ்டர்களுக்கும், அரியர் தேர்வுகளுக்குப் பணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாகப் புதுச்சேரி அரசு அறிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாகப் புதுச்சேரி பாஜக சார்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரி முதல்வர், மாணவர்களின் விஷயத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது மாணவர்களுக்கு இடையே மிகுந்த மன வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே புதுச்சேரி அரசு உடனடியாக இறுதித் தேர்வைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கல்லூரித் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT