Last Updated : 31 Aug, 2020 02:38 PM

 

Published : 31 Aug 2020 02:38 PM
Last Updated : 31 Aug 2020 02:38 PM

இணைய வகுப்பில் 90% அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைப்பு: கோவை எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டம் அசத்தல்

இணையவழி வகுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஆசிரியர்கள். 

கோவை

கோவை எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தில் இணைய வகுப்பில் 90 சதவீத 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுக் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு இணையவழித் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டம்

கோவை மாவட்டத்தில் கோவை, பேரூர், எஸ்எஸ் குளம், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இக்கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி மாவட்ட அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இணையவழி வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது. தனியார் பள்ளிகள் ஏற்கெனவே இப்பணியைத் தொடங்கி விட்டன. அரசுப் பள்ளிகளில் படிப்படியாக இணைய வகுப்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. மடிக்கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணைய வசதிகள் இல்லாமையால் மாணவர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சீரிய முயற்சி மேற்கொண்டு, 90 சதவீத 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களை இணைய வகுப்பில் ஒருங்கிணைத்து, பாராட்டைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து எஸ்எஸ் குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா கூறியதாவது:

''இணைய வகுப்பைப் பொறுத்தவரை முதல்கட்டமாக பிளஸ் 2 மாணவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இக்கல்வி மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 ஆயிரம் மாணவர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டோம். ஆண்ட்ராய்டு செல்போன், இணைய வசதியின்மையால் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆரம்பத்தில் 25 சதவீத மாணவர்களே இணைய வகுப்பில் பங்கேற்றனர்.

பின்னர் அருகருகே உள்ள மாணவர்களை ஒரே இணைப்பின் வழியாக ஒருங்கிணைத்தோம். இதனால் மாணவர்கள் வருகைப் பதிவு அதிகரிக்கத் தொடங்கியது. ஆசிரியர்களும் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு உதவினர். சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தனர். வெபெக்ஸ் என்ற செயலியை இணைய வகுப்புக்குப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் தினந்தோறும் 50 நிமிடங்கள் தொடர்ந்து இணைய வசதி இல்லாமலே மாணவர்கள் வகுப்பில் பங்கேற்கின்றனர். அதன்பின்னர் வருகைப் பதிவைச் சரிபார்த்தபோது 90 சதவீதம் பேர் இணைய வகுப்பில் இணைந்தது தெரிய வந்தது.

ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் இது சாத்தியமானது. கோவை மாவட்டத்தில் 90 சதவீத மாணவர்களை இணைய வகுப்பில் இணைத்துள்ளது எங்கள் கல்வி மாவட்டம் மட்டுமே. இம்மாதத்துக்குள் மீதமுள்ள 10 சதவீதம் பேரையும் இணைத்து விடுவோம். முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் வசதியில்லா மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதையடுத்து எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்.

இதற்காகத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசித்து வருகிறோம். மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளைக் கவனிக்க அறிவுறுத்தியுள்ளோம்''.

இவ்வாறு கீதா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x