Published : 31 Aug 2020 11:56 AM
Last Updated : 31 Aug 2020 11:56 AM
மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைக் கலைப் பிரிவுப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம், பொருளாதாரம், சுற்றுலாவியல் மற்றும் பயண மேலாண்மை, பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், பி.காம்., பி.காம்.சி.ஏ. ஆகிய 9 இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் மொத்தம் 468 இடங்கள் உள்ளன.
இவற்றில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் சேருவதற்கு 3,693 மாணவ, மாணவிகள் இணையம் வழியாக விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த 29-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் தி.சுகுமாரன் தலைமையில், மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் பாண்டியராஜன், உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தையல்நாயகி, சந்திரசேகர், கண்காணிப்பாளர் வேலுமணி, நிதியாளர் வித்யா ஆகியோர் கலந்தாய்வு நடத்தி, சேர்க்கைக்கான அனுமதி ஆணைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நாளை (செப். 1) கலைப் பிரிவுப் பாடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து முதல்வர் தி.சுகுமாரன் கூறும்போது, ''கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்ப நகலைக் கொண்டுவர வேண்டும். இதுகுறித்த தகவல் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுந்தகவல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆக.28-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும், 29-ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
30 மற்றும் 31-ம் தேதி விடுமுறை. நாளை (செப். 1) கலைப் பிரிவுப் பாடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு குறித்த விவரம் gacmtp.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT