Published : 31 Aug 2020 08:23 AM
Last Updated : 31 Aug 2020 08:23 AM

‘இந்து தமிழ் திசை’, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’: ஏராளமான வேலைவாய்ப்புகள் வழங்கும் கடல்சார் படிப்புகள்- ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

பல்வேறு நாடுகளின் கலாச்சார சூழல், உலகம் சுற்றும் வாய்ப்பு ஆகியவற்றை விரும்புவோர் கடல்சார் படிப்புகளை தேர்ந்தெடுத்தால், அத்துறையில் அதிக சம்பளத்துடன், உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை வேல்ஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை பல்லாவரம் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை கடந்த 29-ம் தேதி நடத்தியது. இதில், கடல்சார் படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

சென்னை வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) ஸ்கூல் ஆப் மரைன் ஸ்டடீஸ் இயக்குநர் கேப்டன் என்.குமார்:

பொதுவாகவே பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் இன்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருகின்றனர். இவற்றைத் தாண்டி, உடனடி வேலைவாய்ப்பு தரக்கூடிய பல படிப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கடல்சார் படிப்பு. கடின உழைப்பு, சாகசம், பன்னாட்டு கலாச்சார சூழலில் பணியாற்றும் விருப்பம் உடையவர்களுக்கு கடல்சார் படிப்புகள் மிகவும் ஏற்றது. கைநிறைய சம்பளம், வரியில்லாத வருமானம், உலகத்தை வலம்வரும் அரிய வாய்ப்பு, பல்வேறு நாடுகளின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களை அறியக்கூடிய அருமையான வாய்ப்பு, சாகசம் நிறைந்த பணிச் சூழல் போன்றவை கடல்சார் பணிகளின் சிறப்பு அம்சங்கள்.

கடல்சார் படிப்பில் மெர்ச்சன்ட் நேவி, மரைன் இன்ஜினீயரிங் என 2 பெரும் பிரிவுகள் உள்ளன. மெர்ச்சன்ட் நேவி பிரிவில் பணியாற்ற பி.எஸ்சி. நாட்டிகல் சயின்ஸ், டிப்ளமா இன் நாட்டிகல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் உதவும். பி.எஸ்சி.யில் சேர பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இவற்றில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். மேலும், பிளஸ் 2 அல்லது எஸ்எஸ்எல்சி-யில் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 17 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். டிப்ளமாவுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.

நல்ல உடல்நலம் அவசியம். குறிப்பாக, நிறம் பிரித்தரியும் குறைபாடு (Colour Blindness) கட்டாயம் இருக்கக் கூடாது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாட்டிகல் சயின்ஸ் படிப்பை முடித்துவிட்டு டெக் கேடட், 3-ம் நிலை அதிகாரி, 2-ம் நிலை அதிகாரி, தலைமை அதிகாரி, கேப்டன் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

மரைன் இன்ஜினீயரிங் பிரிவில் சேர்வதற்கு பி.இ. அல்லது பி.டெக். மரைன் இன்ஜினீயரிங் படிக்க வேண்டும். இதில் சேர, பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். பொறியியல் படிப்புபோல, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் ஓராண்டு கால முன்கடல் பயிற்சியை (Pre-sea training) முடித்தும், அதேபோல, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் டிப்ளமா படித்தவர்கள் (பாலிடெக்னிக்) 2 ஆண்டுகால முன்கடல் பயிற்சியை முடித்தும் மரைன் இன்ஜினீயர் ஆகலாம். மரைன் இன்ஜினீயர்கள் டிரெய்னீ இன்ஜினீயராக பணியில் சேரலாம். டெக் துறையைப் போன்றே, டிரெய்னீ இன்ஜினீயர்கள் பணியில் சேர்ந்ததும் ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறலாம். தலைமை இன்ஜினீயர்களுக்கு ரூ.7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஈகிள்ஸ்டார் ஷிப் மேனேஜ்மென்ட் மரைன் மாஸ்டர் கேப்டன் ஏ.முசுகுந்தன்:

கப்பல் துறையில் மெர்ச்சன்ட் நேவி, மரைன் இன்ஜினீயரிங் துறைகள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமான துணை தொழில்வாய்ப்புகளும் உள்ளன. இத்துறை பணிகள் பெரும்பாலும் கடற்கரை சார்ந்தவை. கப்பல்களை துறைமுகத்துக்கு கொண்டுவருவது, கப்பல்களுக்கு தேவைப்படும் பணிகளை செய்வது, கப்பல் மற்றும் துறைமுக மேலாண்மை, சரக்கு மேலாண்மை, கப்பல் கட்டுவது, கப்பல் பழுதுபார்ப்பது என பலதரப்பட்ட பணிவாய்ப்புகள் இதன்கீழ் வருகின்றன. திறமை அடிப்படையில் சம்பளம் கிடைக்கும். ஷிப் மேனேஜர், ஆபரேட்டர், ஷிப்யார்டு ரிப்பேர் மேனேஜர், நேவல் ஆர்க்கிடெக்ட், சர்வேயர், ஆடிட்டர், ஷிப் இன்ஸ்பெக்டர், மரைன் பைலட், ஹார்பர் மாஸ்டர், துணை கன்சர்வேட்டர் ஆஃப் போர்ட், ஷிப் மாஸ்டர் என எண்ணற்ற பதவிகளைக் குறிப்பிடலாம். நிர்வாகத் திறமை உடையவர்களுக்கு நாட்டிகல் சயின்ஸ் துறை மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர்கள் நாட்டிகல் பிரிவை தேர்வு செய்வது நல்லது.

நாட்டிகல் சயின்ஸ், மரைன் இன்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனம், இந்திய கப்பல் துறை தலைமை இயக்குநரகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமா என்பதை, இயக்குநரகத்தின் இணையதளத்தை (www.dgshipping.gov.in) பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல, படித்து முடித்து வேலையில் சேரும்போது, அந்நிறுவனம் அங்கீகாரம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனமா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன்:

ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 95 சதவீதம் கடல்மார்க்கமாக நடைபெறுகிறது. நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து, கப்பல்கள் வழியாகவே நடக்கிறது. உலக அளவில் வர்த்தகம் அதிகரிப்பதால், கப்பல் துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். பி.எஸ்சி. லாஜிஸ்டிக்ஸ், எம்பிஏ லாஜிஸ்டிக்ஸ் படிப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உள்நாட்டில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல கோடி மதிப்பில் ‘சாகர் மாலா’ என்ற முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கப்பல் கட்டுதல் துறை வளர்ந்து வருவதாலும், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாலும், வருங்காலத்தில் கப்பல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும்.

கப்பல் துறையின் முக்கிய அங்கமாக துறைமுகம் விளங்குகிறது. துறைமுகங்களில் மரைன் பைலட், ஹார்பர் மாஸ்டர், கப்பல் சிப்பந்தி, டெக் மாஸ்டர் என பல்வேறு விதமான பணிவாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுதி, பிளஸ் 2 மாணவர்கள் கடல்சார் மற்றும் துறைமுக மேலாண்மை, சரக்கு போக்குவரத்து மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவர்கள், பெற்றோரின் பல்வேறு கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இதில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/2DeVr2A என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x