Published : 31 Aug 2020 08:02 AM
Last Updated : 31 Aug 2020 08:02 AM

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் இன்று தொடக்கம்

சென்னை

கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் 3.12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

செப்.4 வரை சேர்க்கை

இதைத்தொடர்ந்து கல்லூரிகள் அளவிலான மாணவர் சேர்க்கை 28-ம் தேதி தொடங்கியது. மேலும், செப்.4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கிடையே, இணையதளம் மூலம் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக, மாணவர் சேர்க்கை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் 31-ம் தேதி முதல் இணையவழி வகுப்புகள் தொடங்கவேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்களை அறிவுறுத்திருந்தார். அதன்படி, இன்று (31-ம் தேதி) முதல் இளநிலை முதலாண்டு மாணவர்களுக்கான இணையதள வகுப்புகள் தொடங்குகின்றன.

முன்னதாக, கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, இணை வழி வகுப்புகள் தொடங்க ஏதுவாக செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்து உயர்கல்வித் துறை சார்பாக மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களை வகுப்புவாரியாக ஒருங்கிணைத்து இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x