Published : 26 Aug 2020 01:25 PM
Last Updated : 26 Aug 2020 01:25 PM
தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நீட், ஜேஇஇ தேர்வெழுத வரும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் 13-ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்காக ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் 570-ல் இருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் 2,546-ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான ஷிஃப்டுகள் 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு ஷிஃப்டுக்கான மாணவர் எண்ணிக்கை 1.32 லட்சத்தில் இருந்து 85 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், ஒரு சீட் இடைவெளி விட்டு மாணவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு ஒவ்வோர் அறையிலும் 24 மாணவர்களுக்குப் பதிலாக 12 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படுவர். உடல் வெப்பம் அதிகமாக இருந்தாலோ, கரோனா அறிகுறிகள் இருந்தாலோ மாணவர்கள் தனி அறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
மாணவர்கள் தங்களுக்குக் கரோனா அறிகுறிகள் இல்லை என்றும், கரோனா பாதித்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கண்காணிப்பாளர் முன்னிலையில் எழுத்துபூர்வ உறுதி அளிக்க வேண்டும். தேர்வறைக்குள் நுழையும் போது கூட்டமாகச் செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் காத்திருக்கும்போதும் தேர்வு முடிந்த பின்னரும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும்''.
இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT