Published : 26 Aug 2020 07:11 AM
Last Updated : 26 Aug 2020 07:11 AM

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு எப்எம்ஜி தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் பிரச்சினை: சொந்த ஊருக்கு மாற்ற கோரிக்கை

சென்னை

தமிழகத்தில் இருந்து எப்எம்ஜிதேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்கும்படி கேட்டுக்கொண்ட பின்னரும், தமிழக மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகாவில் மையங்களை ஒதுக்கி, இப்பிரச்சினையை தேசிய தேர்வு வாரியம் மேலும் குழப்பமாக்கி உள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாகப் பணியாற்ற, ‘Foreign Medical Graduate Examination’ (எப்எம்ஜிஇ) தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்தியமருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில், மருத்துவர்களாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும்.

ஆண்டுக்கு 2 முறை ஆன்லைனில் நடக்கும் இத்தேர்வு வரும் 31-ம் தேதி நடக்க உள்ளது.

தற்போது கரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லை. அதனால்,தேர்வு மையங்கள் அவரவர் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதுதொடர்பாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழியாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இக்கோரிக்கையை வைத்தனர்.

ஆனால், நேற்று தமிழக மாணவர்கள் பலருக்கு பிற மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டு ஹால் டிக்கெட்களும் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை. அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களைப் பெற்றவர்கள், சனிக்கிழமையே தங்கள் ஊரில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இல்லாத சூழல், விடுதிகள் இயங்காத நிலையில், 2 நாட்களுக்கு முன்பே சென்று வெளியூர்களில் தங்கவும் முடியாது.

இதுபோன்ற சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட தேசிய தேர்வு வாரியம், தேர்வு மையங்களை மாற்றி ஹால் டிக்கெட் வழங்கலாம். மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இதில் தலையிட்டு விரைவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x