Published : 25 Aug 2020 09:12 AM
Last Updated : 25 Aug 2020 09:12 AM
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தித்துக்கு உட்பட்ட வீராணம் ஏரிக்கரையில் உள்ளது தெற்கு விருதாங்கநல்லூர் கிராமம்.
இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் நித்தியானந்தம். இவரது மனைவி சுந்தரவள்ளி. இவர், சின்னமணல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இவர்களது மகள் மகிழினியை, சுந்தரவள்ளி தான் பணிபுரியும் சின்ன மணல்மேடு அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். முதல் வகுப்பில் சேர்ந்தமகிழினிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் ரோஜாப்பூ அளித்துவரவேற்றார். தொடர்ந்து மாணவி மகிழினிக்கு அரசின் விலையில்லா பாடப் புத்தகம் சீருடை வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாணவி மகிழினியின்தந்தையும் அரசு பள்ளி தலைமையாசிரியருமான நித்தியானந்தம் கூறுகையில், “நான் அரசு சார் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறேன். எனது மனைவியும் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியையாக உள்ளார்.
எனவே எனது மகளும் அரசு அல்லது அரசு சார் பள்ளியில் சேர்ந்து படிப்பது தான் சரியானதாக இருக்கும். அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கிறது என்பது இந்தச் சமூகத்திற்கு தெரிய வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக நாங்கள் இருக்க வேண்டும். அதற்காக எனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதையறிந்து அந்த ஆசிரிய தம்பதியின் நண்பர்கள், குடும்பத் தினர் அவர்களை தொலை பேசியில் அழைத்து பாராட்டினர்.
வருத்தப்பட வேண்டிய மாற்றம்
“கிராம பகுதியில் அரசு சார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தம்பதி, தங்கள் மகளை அதே போல், அரசு சார்பள்ளி ஒன்றில் சேர்ப்பதே சரியான நடைமுறை. கடந்த பல ஆண்டுகளாகவே பல ஆசிரியர்கள் கடைபிடித்து வந்த நல்ல நடைமுறை இது.
மேலும், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் போது, அவர்களை அழைத்துச் செல்வது மற்றும் கல்வி நிலையை அறிந்து கொள்வது போன்றவை பெற்றோர் என்ற முறையில் அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
ஆனால், தனியார் பள்ளி மோகத்தில், அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை தற்போது அதிகரித்திருக்கிறது. இது வருந்தத்தக்கது.
அந்தச் சூழலில், இந்த ஆசிரியர் தம்பதி, தங்கள் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கும் நிலைக்கு மாறியிருக்கிறது.
இப்படி மாறி வரும் சூழல் வருந்ததக்கது” என்று சமூக அக்கறையுள்ள கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT