Published : 25 Aug 2020 09:12 AM
Last Updated : 25 Aug 2020 09:12 AM
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத் தலைநகரான தென்காசியில், அரசு சுவர்கள் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்றும், போஸ்டர்கள் ஒட்ட தனியாக இடம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு, அந்த பகுதிகளில் ஓவியங்கள் வரைந்து நகரை அழகுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் களப்பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, சாலையோர மரங்களில் ஆணி அடித்து அமைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து, சுண்ணாம்பு அடித்து, மாணவ, மாணவிகள் மூலம் அந்த சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. இயற்கைக் காட்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், விழிப்புணர்வு கருத்துகள் போன்றவற்றை மாணவ, மாணவிகள் ஓவியங்களாக வரைந்துள்ளனர். தாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அருகில் தங்கள் பெயர், படிக்கும் பள்ளி போன்ற விவரங்களையும் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
தென்காசியை அழகுபடுத்தும் பணியில் தங்களுடன் ஆர்வமுள்ளோர் இணையலாம் என, ப்ராணா மரம் வளர் அமைப்பு, மழை நண்பர்கள், என்எப்எஸ் டிரஸ்ட், அறம் அமைப்பு, விதைகள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT