Published : 24 Aug 2020 05:34 PM
Last Updated : 24 Aug 2020 05:34 PM
இந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற தமிழக ஆசிரியைகள் இருவர் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை வளாகத்தில், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கீதா சீனிவாசன் என்பவர் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் செயல்படும் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆக. 22-ம் தேதி விமானம் மூலமாகப் புறப்பட்டுச் சென்ற அவர், இன்று அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார்.
ரஷ்யாவில் உள்ள ஆசிரியை கீதா சீனிவாசனை, வாட்ஸ்அப் அழைப்பு வழியாகத் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது:
''வெளிநாடுகளில் இந்திய அரசுடைய தூதரகவாசிகளின் குழந்தைகள் படித்துப் பயன்பெறுவதற்காகப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 12 ஆசிரியர்கள் மற்றும் 1 முதல்வர் என 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.
முன்னதாக வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசு எங்களைத் தேர்வு செய்தது.
கோவை சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து நானும், சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து தந்தரா ரெட்டி ஆகிய இருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளோம். நான் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியை தந்தரா ரெட்டி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பாடம் நடத்த உள்ளோம். இவ்வாறு வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்து அனுப்பப்படுவது மிகப்பெரிய கவுரவம்.
நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து இங்கே ஆசிரியையாகப் பணியாற்றி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வெளிநாட்டிலும் பணியாற்றத் தொடங்கியுள்ளது பெருமையாக உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோவை திரும்புவேன்''.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியை கீதா சீனிவாசனுக்கு சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் வி.மேகநாதன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT