Published : 24 Aug 2020 03:42 PM
Last Updated : 24 Aug 2020 03:42 PM
ஓசூர் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் ஒருவர், கோடை காலத்தில் மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அதன் பசுமைத் தன்மை மாறாமல் பேணிக்காக்கும் வகையில் காற்றில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
ஓசூர் மூக்கொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் -மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு அரவிந்த் (25), கவுரிசங்கர் (21) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கவுரிசங்கர் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பி.டெக் (கெமிக்கல் இன்ஜினியரிங்) இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த மாணவர் கரோனா விடுப்பு காலகட்டத்தில் காற்றில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதன் மூலமாக சாலையோரங்கள் மற்றும் இதர இடங்களில் தண்ணீர் இன்றி வெயிலில் வாடும் மரம், செடிகளுக்குத் தேவையான தண்ணீரை 24 மணிநேரமும் வழங்க முடியும் என்கிறார் மாணவர் கவுரிசங்கர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஓசூர் ஏரிக்கரை, சாலையோரப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டோம். இந்த மரக்கன்றுகள் அனைத்தும், கோடை வெயிலில் தண்ணீர் இன்றி வாடின. அருகில் இருந்த வீடுகளில் தண்ணீர் கேட்டபோது யாரும் தண்ணீர் கொடுக்க முன் வரவில்லை. எங்களுக்கே குடிக்கத் தண்ணீர் இல்லை இதில் மரம் வளர்க்க எங்கே தண்ணீர் கொடுப்பது என்று தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனால் மரக்கன்றுகளுக்குக் கோடை காலத்திலும் தடையின்றி நிரந்தரமாகத் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கரோனாவால் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். அதற்கான முயற்சியை மேற்கொண்டு கடந்த நான்கு மாதங்களில் காற்றில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் “மொயிஸ்ட்ரீ” என்ற பெயரில் ஒரு கருவியை உருவாக்கி உள்ளேன்.
இந்தக் கருவியில் உள்ள சோலார் தகடுகள் மூலமாக 40 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் மூலமாகக் கருவியில் உள்ள காற்றாடி வேகமாகச் சுழலும் போது வெளியில் உள்ள காற்று உள்ளிழுக்கப்பட்டு ஹீட் எக்ஸ்சேஞ்சர் கருவி மூலமாக காற்றிலுள்ள ஈரப்பதம் தண்ணீராக மாற்றமடைகிறது. இந்த தண்ணீர், மரம், செடி, கொடிகளுக்கு தேவையான சத்துக்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவை நிரப்பப்பட்ட பில்டர் வழியாக வெளியே வரும் போது சத்துள்ள தண்ணீராக மாறுகிறது.
இந்த சத்துள்ள தண்ணீரைச் சிறிய குழாய்கள் மூலமாக மரக்கன்றுகளின் வேர்ப் பகுதியில் இணைத்து சொட்டுநீர்ப் பாசன முறையில் தொடர்ந்து 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர்க் குழாய்கள் இணையும் மரக்கன்றுகளின் வேர்ப் பகுதியை சுற்றிலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மையுள்ள நார்களைப் பரப்பி வைப்பதன் மூலமாக மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீரைக் கிடைக்கச்செய்து அதன் பசுமைத்தன்மையை பாதுகாக்கலாம். இந்தக் கருவி ஒரு மீட்டர் உயரமும், சுமார் 8 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது. இந்த கருவியைத் தயாரிக்கக் குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் செலவாகும்.
மேலும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி வனவிலங்களுக்குக் கோடைகாலத்திலும் நிரந்தரமாகக் குடிநீர் வழங்க முடியும். வறட்சியான வனப்பகுதியில் இதைப் பொருத்தி தண்ணீரைச் சேகரித்து விலங்குகளின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். விலங்குகளால் இந்தக் கருவிக்குச் சேதம் ஏற்படாதவாறு கருவியை மண்ணுக்குள் புதைத்து வைத்து மூடியும், சோலார் தகடுகளை உயரமான கம்பங்களில் பொருத்தியும் இந்தக் கருவியை இயக்க முடியும். கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ஓசூர் கால்நடைப் பண்ணையில் மாணவர்களுக்கான மரக்கன்றுகள் நடவு செய்யும் போட்டி நடைபெற்றது.
அச்சமயத்தில் ஓசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா முன்னிலையில் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் கருவியின் செயல் விளக்கம் செய்து காட்டினேன். அப்போது என்னுடைய முயற்சியைப் பாராட்டிய எம்எல்ஏ, இதுதொடர்பாகத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.''
இவ்வாறு மாணவர் கவுரிசங்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT